வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினர் மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன்

By T. Saranya

08 Mar, 2022 | 11:51 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிகமுக்கிய வழக்குகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கரிசனையை வெளிப்படுத்திய பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் காணி அபகரிப்புச்சம்பவங்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையின மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரிட்டனின் பிரதிநிதி ரீட்டா ஃபிரென்ச் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையை பிரிட்டன் வரவேற்கின்றது. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது குறித்து நீங்கள் வெளிப்படுத்தியிருந்த கரிசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிகமுக்கிய சில வழக்குகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவுகள் குறித்துக் கவலையடைகின்றோம்.

 அண்மையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னாப் ஜஸீம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதுடன் அதனை நேர்மறையான முதற்கட்ட நகர்வாகக் கருதுகின்றோம். மேலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகள் குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கும் அதேவேளை, அத்திருத்தங்கள் போதுமானவையல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அடுத்ததாக சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளைப் பேணும்வகையில் வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நகர்வுகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்தும் சிவில் அரச நிர்வாக செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பிலும் கரிசனை கொண்டிருக்கின்றோம். குறிப்பாக ஓர் முக்கிய வழக்குடன் தொடர்புபட்டிருக்கக்கூடிய நபரொருவர் மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

அதேபோன்று காணாமல்போனோர் விவகாரம் மற்றும் இழப்பீடு வழங்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்ட அரச கட்டமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை அங்கீகரிப்பதுடன், அவை செயற்திறன்மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுடன் இணைந்ததாக சிறுபான்மையின மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றமை தொடர்பில் மிகுந்த கரிசனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். 

இவ்வாறானதொரு பின்னணியில் 46/1 தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் இயங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right