பெண்களை போற்றும் விதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் சர்வேதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் பெரும் புரட்சிகளின் வரலாறு உண்டு. 

18 ஆம் நூற்றாண்டுகளில் பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மாத்திரமே என்ற கருத்தை எதிர்த்து 1910 ஆம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் மாநாட்டை நடத்தினர். இதில் க்ளாரா ஜெட்கின் முன்னிலையில் நின்றார். 

இவர் பெண் உரிமைகளுடன் சேர்து மகளிர் தினம் வேண்டும் என்றும் போராடினாலும் 1917 ஆம் ஆண்டு ரஸ்ய பெண்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்ப்புரட்சி பெண் உரிமைகளுக்கான மைல்கல்லாகவே அமைந்தது இப்போராட்டத்தில் அலெக்சான்டரா முன்நின்று செயற்பட்டார். இவர்களின் போராட்டம் பலரின் ஆட்சியை கவிழ்த்தது என்றே கூறலாம். 

மேலும் க்ரிகேரியன் calender இல் அவர்கள் பெண்களுக்காக கோரிய இறுதி ஞாயிற்றுக்கிழமை மாரச் 08 ஆக காணப்பட்டமையால் அத்தினமே இன்று மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இம்முறையில் போராடிப்பெற்ற மகளிர் தினத்தை இன்று எல்லாப்பெண்களும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் கொண்டாடுகின்றார்களா? என நோக்கினால் சில காரணிகளால் பெண்கள் இன்று அல்லல் பட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர். அதில் பிரதானமான காரணியாக அமைவது ஆண்களின் மதுசாரப்பாவனை என்று கூறலாம்.

கணவர்கள் மதுசாரம் அருந்துபவர்களாக காணப்படுவதால் பெண்கள் இன்று பாரிய பொருளாதார பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். உணவு பண்டங்களின் விலை உயர்வு கொவிட்கால வேலையில்லாப்பிரச்சினை என்பவை காரணமாக ஓர் சீரான முறையில் குடும்பங்களை கொண்டுசெல்ல முடியாத சூழலில் வருமானத்தில் பெரும்பங்கை மதுசாரத்திற்காக கணவர் செலவழிப்பதால் அன்றாட உணவு தேவையை கூட சரியாக வழங்க முடியாத சூழ்நிலையில் பெண்கள் இன்று கடனாலிகளாக அலைகின்றனர்.

கணவர் மதுசாரம் அருந்தி வீணடிப்பதால் மேலோங்கி காணப்படும் கடன் தொல்லை காரணமாக வீட்டுப்பெண்கள் மட்டுமல்லாது குடும்பத்தில் காணப்படும் பெண் பிள்ளைகளின் வாழ்விலும் கடும் துயரங்கள் ஏற்படவே செய்கிறது. கடன்தொல்லைகளை குறைக்கவும் தாய்மாரின் கண்ணீரை துடைக்களாம் என்ற அவாவிலும் இன்று பெண்பிள்ளைகள் பாடசாலை கல்வியை முறித்துக்கொண்டு இடைவிலகி கொழும்பிற்கு வேலைக்காக செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பெண்களின் நிலையை எழுத்து வடிவில் வரைந்து காண்பிப்பது இயலாத ஒன்று இப்பெரும் துயருக்கு காரணமாகவும் பின்புலமாகவும் காணப்படுவது ஆண்களின் மதுசாரப்பாவனை எனும் கொடூரம்.

கணவரின் மதுசாரப்பாவனையால் பெண்கள் வருமானம் இழந்தார்கள், கல்வியை இழந்தார்கள் இதனுடன் முடிவடையாது குடும்ப வாழ்வில் நிம்மதியான உறக்கத்தை கூட இன்று இழந்து நிற்கின்றனர். வீட்டு வன்முறைகள் என்பது 18 நாட்களில் 123 குடும்பங்கள் வன்முறைப்புகார் செய்கின்றனர் என்பது தேசிய மகளிர் ஆணையகத்தின் பதிவு இவ்வன்முறைகளுக்கு பின்னால் காரணங்களை ஆராய்ந்துப்பார்த்தால் கணவர் மதுசாரம் அருந்திவிட்டு ஏற்படுத்திய கோளாறுகளாகவே காணப்படுகின்றது.

மதுசாரம் அருந்திவிட்டு கணவர் செய்யும் வீட்டு வன்முறைகளின் வடிவங்கள் இன்று உடல்ரீதியாகவும் இ பாலியல் ரீதியாகவும், உளவியல், மனவெழுச்சி ரீதியாகவும் வாய்மொழி மற்றும் உடைமைகளை அழித்தல் போன்ற சகல முறைகளிலும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் என அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இதன் உண்மையான விஸ்திரத்தன்மை 40 சதவீதம் மட்டுமே புகாராக வெளிவருகின்றன 60 சதவீதமானவை இன்றும் பதியப்பாடாமல் எமது நாட்டு கலாச்சார பின்னனியில் மறைக்கப்பட்டே வருகின்றது.

இவை அனைத்தும் கணவர் மதுசாரம் அருந்திவிட்டு வந்து செய்யும் பிரச்சினைகளாவே அமையும் பட்சத்தில் பாதிக்கப்படும் பெண்களிடம் கணவர் இவ்வாறு நடந்துக்கொள்ள காரணம் யாது என வினவி பதில்களை ஆராய்ந்தால் கணவர் குடிக்கும் மதுசாரம் அதனாலேயே அவர் சுயநினைவு இன்றி இவற்றை செய்கிறார் என கூறுகின்றனர். இப்பதிலையும் இவ்வாறான எண்ணத்தையும் கொண்ட பெண்கள் அனைவரும் முட்டாள்களாகவே உள்ளனர் என்றாள் தவறில்லை.

மதுசாரம் அருந்துபவர்கள் சுயநினைவு இன்றி இருக்கிறார்கள் என்பது பொய்யான தகவல் மதுசாரத்தில் ஞாபக மறதியை தூண்டும் எவ்வித இரசாயணமும் இல்லை என்பது மதுசாரம் தொடர்பான ஆய்வுகளின் முடிவு அம்முடிவுகளை ஏற்கா விட்டாலும் உங்களது கணவரின் நடத்தைகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் இது எவ்வளவு உண்மையான ஒன்று என உணர்வீர்கள்.

மதுசாரம் அருந்திவிட்டு சண்டை போடுபவர்கள் ஒரு நாளும் தன்னை விட பலம் கூடியவர்களுடன் முரண்பட மாட்டார்கள் தன்னை விட பலத்தால் குறைந்த வெகுலியானவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மட்டுமே சண்டை போடுவார்கள் சுயநினைவு இல்லாதவர்களுக்கு சண்டை போடக்கூடிய நபர்களை சரியாக தெரிவு செய்வதற்கு மாத்திரம் சுயசிந்தனை எப்படி வருகின்றது.

மனைவி பிள்ளைகளிடம் அல்லது பாதைகளில் தள்ளாடி தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு காவல் அதிகாரி அல்லது தன்னை விட பலமானவரை கண்டால் ளசை என மரியாதையாக அழைக்கிறார். அலங்கோலமாக காணப்படும் உடைகளை சரிசெய்து கொண்டு பாதையில் ஒரு ஓரமாக நடந்து செல்கின்றார் மதுசாரம் அருந்தினால் சுயநினைவு இருக்காது என்றால் அதிகாரிகளை கண்டதும் எப்படி மாறுகின்றார் இதனை சிந்தித்துப்பாருங்கள் மதுசாரம் குடித்திருக்கின்றோம் என்ற பொய்ச்சாட்டுக்களை பரப்பிக்கொண்டு குடும்பத்தையும் சமூகத்தையும் சீரழித்துக்கொண்டு மதுசார நிறுவனங்களை செழிப்பாக வாழ வைக்கின்றனர்.

இவ்வாறான இன்னல்களுடன் மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் உண்மையில் மதுசாரம் அருந்தி விட்டுவந்து கணவர் செய்யும் பொய் அட்டகாசங்களை என்று எதிர்க்கின்றீர்களோ அல்லது அவை உங்களை மிரட்டுவதற்காக மதுசாரநிறுவனங்களுடன் உங்கள் கணவர் போடும் சதியாட்டம் என்று எப்போது உணர்ந்துக்கொள்கின்றீர்களோ அன்றே நீங்கள் உங்களுக்கான மகளிர் தினத்தை மகிழ்சியாகவும் உண்மையாவும் கொண்டாடுவதாக அமையும்.

உங்களின் தூய்மையான வாழ்வை சீரழிக்கும் ஆண்களின் மதுசார பாவனையை எதிர்த்து நில்லுங்கள் மகளிர் உரிமை மற்றும் தினத்திற்காக 19 ஆம் நூற்றாண்டு பெண்கள் போராடினார்கள் வெற்றியும் கண்டனர் 21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் மதுசாரத்தை குடித்துவிட்டு பொய் வீரியம் காட்டும் கணவர்களுக்கோ அல்லது அவர்கள் குடிக்கும் மதுசாரத்திற்கு பயந்து போராடிப்பெற்ற மகிழ்ச்சியை பொய்யாக கொண்டாடாதீர்கள் உங்களை ஏமாற்றுபவர்களை எதிர்த்து நில்லுங்கள் எதிர்ப்பு என்பது போராட்டங்களும் வன்முறைகளும் மட்டுமல்ல என்பது இன்றைய பெண்களுக்கு விளங்காத விடயமில்லை.

மதுசாரம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் மட்டுமல்ல வீட்டு பெண்களிடம் வலாட்டினாலும் தண்டை என்ற நடைமுறை இலங்கை நாட்டில் ஏற்பட வேண்டும். பெண்களின் உரிமை, சுதந்திரம் என்பது வேலைத்தலங்களிலும் வருமான பங்குகளில் மட்டுமல்ல கணவர் உங்களை அழைக்கும் ஓர் மரியாதையான வாரத்தையிலும் காணப்பட வேண்டும் என்பதை உணருங்கள்.

மதுசாரம் அருந்திவிட்டு கணவர் படுத்தும் பாட்டை எதிர்க்காவிட்டாலும் அவை கணவர் மற்றும் மதுசார நிறுவனங்கள் உங்களை ஏமாற்ற போடும் நரித்தனம் என்பதை உணர்ந்த பெண்களாக மகளிர் தினத்தை கொண்டாடுங்கள்.