Published by T. Saranya on 2022-03-07 10:44:46
(எம்.மனோசித்ரா)
வகுப்பறைகளில் 40 இற்கும் அதிக மாணவர்கள் காணப்பட்டால் அவர்களை இரு தொகுதிகளாக பிரித்து பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது அடிப்படையற்றது.
கொவிட் அச்சுறுத்தலால் ஏற்கனவே மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , எவ்வித அடிப்படைகளும் இன்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய துறைகளுடன் விளையாடியதைப் போன்று மாணவர்களின் கல்வியுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வகுப்பறையொன்றில் 40 இற்கும் குறைவான மாணவர்கள் காணப்படுவார்களாயின் அவர்களை தொகுதிகளாக்கி பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம்? கொவிட் தொற்று தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் கூட அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது எந்த காரணமும் இன்றி இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டின் பல பிரதேசங்களிலும் பாரிய அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறிருக்கையில் பாடசாலைகளை ஏன் முழுமையாக ஆரம்பிக்க முடியாது? தற்போது ஆரம்பமாவது 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகும்.
தொடர்ந்து மே மாதத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. எனவே மாணவர்களின் கல்வியுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.
தற்போது நாட்டில் பாரியளவில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களும் எவ்வாறு பாடசாலைக்கு சமூமளிப்பார்கள்? இதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள மாற்று திட்டங்கள் யாவை என்பதை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றார்.