முற்றுப்பெறாத யாழ்.முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

05 Mar, 2022 | 10:52 PM
image

1990களில் யாழ்.முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது (வைப்பகப் படம்)

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தைச் சேர்ந்த 14,400 குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் (மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 5சதவீதமானவர்கள்) இரண்டு வாரகாலப்பகுதியில் அவர்களின் வாழிடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சாவகச்சேரியில் ஆரம்பித்த பலந்த வெளியேற்றம் பின்னர், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியாவின் குறிப்பிட்ட பகுதிகள் வரையில் விரிவடைந்து அதே ஒக்டோபர் மாதத்தின் 30ஆம் திகதி வரையில் நிகழ்ந்திருந்தது.

அநேகமான குடும்பங்கள் தமது சொந்த இடங்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெறுமனே 500ரூபா பணத்துடனும் உடுத்த உடையுடனும் வடமாகாணத்தின் எல்லையைக் கடக்கும் வரையில் பொடிநடையாகவே வந்திருந்தனர்.

அவ்வாறு வெளியேறியவர்கள் புத்தளம், நீர்கொழும், பானந்துறை, பலகைத்துறை, பெரியமுல்லை, மதுருரங்குளி உட்பட நாட்டின் பல பாகங்களில் சிதறிக் குடியேறினார்கள். அதில் சொற்ப அளவானவர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் எண்ணிக்கையானது உத்தியோக பூர்வமானதாக இல்லாது விட்டாலும் முகாம்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாவட்ட ரீதியான தரவுகள் காணப்படுகின்றன.

அதன்படி, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 54,000பேரும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 20,000பேரும், முல்லைத்தீவை சேர்ந்த 7,000 பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4,000பேரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 400பேரும் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

1990களில் யாழ்.முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் வீடுகள் (வைப்பகப் படம்)

அவ்விதமானவர்களில், பஸ்னா இக்பால் “யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டு 32ஆண்டுகளாகின்றன. இந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்” என்கிறார்.

இதேவேளை, முகாம் வாழ்க்கையின்போது பல்வேறு துன்பங்களைச் சந்தித்தவர்கள் நாளைவில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை அண்மித்து காணப்பட்ட காணிகளில் குடியேற ஆரம்பித்தார்கள். உறவினர்களின் வீடுகளில் தங்கினார்கள். அக்காலத்தில் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்தார்கள்.

உணவுத்தேவையை நிறைவு செய்வது முதல் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்துவது வரையில் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தார்கள். பல்வேறு தரப்பினரிடத்திலும் உதவிகளை கோரிநின்றார்கள். கடினமான காலங்களை கடக்க வேண்டியிருந்தது. வாக்குரிமையைக் கூட இழந்து நின்றார்கள்.

இந்நிலைமைகளுக்கு முகங்கொடுத்தவர்களில் ஒருவரான யாழ். கதீஜா பெண்கள் கல்லூரியின் அதிபர் ஜனாபா – ஜன்ஸி கபூர் குறிப்பிடுகையில், “1990இல் அந்த நாளின் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி வீதியெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின. அவர்களின் அறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் ஆண்கள் யாழ். ஜின்னா மைதானத்திற்குச் செல்ல முஸ்லிம் பெண்கள் கண்ணீரோடு ஆண்களை வழியனுப்பி வைத்தார்கள். அந்தக் கணங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த அழைப்பு எம் அகதி வாழ்க்கைக்கான ஒரு முகப்பென்று.

ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் கூட்டம் முஸ்லிம்கள் 2 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்ல வேண்டுமென முரசறைந்தது. உடுத்திய உடையுடன் நாங்கள் வெளியேற்றப்பட்ட போது எங்கள் பாதம் பட்ட எங்கள் வீதிகள் மக்களின் கண்ணீரால் நிறைந்தது. யாழ். முஸ்லிம் பகுதிகளில் அழுகைச் சத்தம் ஆக்ரோஷமாக வெடித்தது. அக்கணங்களை நானும் சந்தித்தவளென்பதால் அக்கொடுமையான நிகழ்வின் தாக்கம் இன்னும் வலியோடு எனக்குள் அதிர்கின்றது” என்கிறார்

இவ்வாறிருக்க, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிமக்ள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற நீண்டநாள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது முப்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் புதிய தலைமுறையினரும் தமது பூர்வீக பகுதிகளுக்குச் செல்வதற்கே விரும்புகின்றார்கள்.

குறிப்பாக, பெரியவர்கள், தங்களது இறுதிக்காலத்தினை சொந்த மண்ணில் கழிப்பதற்கே முனைகின்றார்கள். தங்களுடைய மூத்தவர்களின் கதைகளில் கேட்ட தமது பூர்வீகத்தைத் காண வேண்டும் என்ற அவாவில் இருக்கும்; இளைய தலைமுறையினரும் மீண்டும் முழுமையாக குடியேற வேண்டும் என்றே விரும்புகின்றார்.

இதில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கணிசமான அளவில் வெற்றியடைந்துள்ளபோதும் யாழ். குடாவில் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் முழுமை பெறாத நிலைமைகள் நீடிக்கின்றன.

மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி சுபியான்

இதற்கான காரணத்தினை வெளிப்படுத்தும் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி சுபியான், “யாழ்.மாவட்டத்தில், சோனகத்தெரு, மண்கும்பான், சுன்னாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் 2009ஆம்ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு வருகை தந்திருந்தனர். எனினும் சோனகத் தெருவில் 40சதவீதமானவர்கள் தமது நிலங்களை விற்பனை செய்து விட்டு தாம் கடந்த முப்பது ஆண்டுகளாக வாழ்ந்த பகுதிகளில் நிரந்ரமாக குடியேறுவதற்காக விரும்பிச் சென்றுவிட்டர்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பிள்ளைகளின் கல்வி என்பன காரணமாக அமைகின்றன. இவர்களை விட தற்போது 800முதல் 1000பேர் வரையிலானவர்கள் மீள்குடியேறியுள்ளார்கள்”என்று குறிப்பிட்டார்.

மேலும், “மீள்குடியேறியவர்களுக்கான ஆரம்ப உதவிகள் கிடைக்கப்பெற்றாலும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவிகளில் போதாமைகள் காணப்படுவதாக சுபியான் சுட்டிக்காட்டுவதோடு, முன்னைகாலத்தில் யாழ்மாவட்ட கடைத்தொகுதிகளில் சுமார் 600கடைகளில் வியாபாரங்களை முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்தனர். தற்போது அவ்விதமான நிலைமைகள் காணப்படவில்லை. வெறுமனே சொற்பமான அளவில் கடைகளை வாடகைக்கு பெற்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்று கூறுகின்றார்.

அதேநேரம், “யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது காணப்பட்ட மக்கள் தொகைக்கும் தற்போதைய தொகைக்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, குடும்ப விருத்தி, பரம்பரை நீட்சி என்பவற்றால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் சொந்த பகுதிகளுக்கு வருகின்றபோது காணிகள் மற்றும் வீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன” என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

“இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, “நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்” என்ற ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டு மாடிவீட்டுத்திட்டமொன்று முன்னெடுப்பதற்கான 2016-2017 காலப்பகுதியில் செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்ட போதும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன”என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிபாஹிர்

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிபாஹிர் கூறுகையில், “நான் யாழ்ப்பாணத்தினை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன். 1990ஆம்ஆண்டு ஒக்டோபர் மாதம் அதிகாலையில் தூக்கத்திலிருந்து விளித்து தொழுகைக்காக தயாராகிக்கொண்டிருந்தபோது எம்மை அழைத்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அசையும் ,அசையாத சொத்துக்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கூறினார்கள். அதுபெரும் அதிர்ச்சியை எமக்கு அளித்திருந்தது” என்கிறார்.

அதன் பின்னர் “நாம் முகாம் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டோம். எமது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காகவும் கல்வியை தொடர்வதாற்காகவும் பல்வேறு இடங்களிலும் கூலி வேலைகள் முதல் அனைத்து விதமான வேலைகளிலும் ஈடுபட்டோம். எமது குடும்பங்களை பராமரித்தோம். அந்த செயற்பாடுகளும், நிகழ்வுகளும் எமது மனதில் ஆறாத வடுக்களாக உள்ளன. பின்னர் போர் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் நாம் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளோம்”என்கிறார் எம்.எம்.எம்.நிபாஹிர்.

அதேநேரம், “எத்தனையோ வலிகளைச் சுமந்திருந்தாலும், மீண்டும்சொந்த மண்ணுக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அனைவரும் தமது சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. இனனமும் எத்தனையோ கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உட்பட்டவையாகவே உள்ளன. அந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்கள் மீளக் குடியேறுதில் சாவல்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

குறிப்பிட்ட சில குடும்பத்தினர் விரிவடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஏற்கனவே இருந்த வீட்டினை மீளமைத்து இருக்கமுடியாது. ஆகவே அவர்களுக்கு மேலதிகமான நிலங்கள் அவசியமாகின்றன” என்றும் எம்.எம்.எம்.நிபாஹிர் வலியுறுத்திக் கூறுகின்றார்.

யாழ்.அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்

இவ்வாறிருக்க, யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்படுகின்ற தாமதங்கள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடத்தில் வினவியபோது, “போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீளக் குடியேற ஆரம்பித்தார்கள். அவர்களில் யாழ்.மாவட்டத்தில் 2800பேர் வரையிலானவர்கள் மீளக் குடியேறுவதற்கான பதிவுகளைச் செய்தார்கள். அவ்விதமாக பதிவுகளைச் செய்தவர்களில் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களுக்கு மீள்குடியேறுவதற்கான வசதிகளை நாம் வழங்கியுள்ளோம். ஏனையவர்களும் திரும்புவார்களாக இருந்தால் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்” என்கிறார்.

ஆனால், “பூர்வீக நிலங்களில் இருந்த குடும்பங்கள் விரிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான காணி, மற்றும் வீடுகளை வழங்குவது தொடர்பில் விசேட அவதானம் ஏற்கனவே செலுத்தப்பட்டு அதற்கான முன்மொழிவுகளும் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியமாகின்றன. உரிய பணிப்புரைகள் வழங்கப்படுமிடத்து அவற்றை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கஅதிபர் அலுவகலம் தயாராகவே உள்ளது” என்றும் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நம்பிக்கை அளிக்கின்றார்.

இவ்வாறிருக்கையில், “முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்படும்போது அப்போதிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை” என்று மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர் குற்றம் சாட்டுகின்றார். “தற்போது கூட வடக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் கண்டுகொள்வதில்லை” என தெரிவிக்கிறார்.

மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர்

“மீள்குடியேற்றம் என்பது ஒரு சலுகையாக பார்க்கப்படுகின்றதே தவிர அது ஒரு உரிமையாக பார்க்கப்படுவதில்லை. காணிகளின் உரிமை தொடர்பாக உள்ள சிக்கல் காரணமாக புத்தளத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்காக ஒரு அலுவலகத்தை தாபிக்க சுமார் பத்து வருடங்கள் ஆகியது. உரிமை சார்ந்த விடயங்கள் எதுவுமே கிடைக்காத நிலைமையே தற்போது வரை இருக்கிறது. 5000 இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் கடுமையான வரையறைகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனநாயக உரிமைகளுக்கும் தீங்குகள் விளைவிக்கப்பட்டன. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்கச் சென்ற வடக்கு முஸ்லிம்களின் பஸ் வண்டி மீது 2019 நவம்பர் 16 ஆம் திகதி அதிகாலை தந்திரிம­லையில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மதவாச்சியில் கும்பல்களின் தாக்குதலில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர் ஆனால் இன்றுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஒரு விசாரணை அறிக்கை கூட தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை” என்ற விடயத்தினையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, நிறைவடையாத நிலையில் உள்ள யாழ்.முஸ்லிம்கள் உட்பட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை பூரணப்படுத்துவதற்கு முஸ்லிம் சமாதான செயலகம் பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை முன்வைக்கின்றது.

1990களில் யாழ்.முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் வீடுகள் (வைப்பகப் படம்)

1)இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2)பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3)மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4)மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5)பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PRSCRIPTION ORDINANCE எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6)பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.

7)1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

8)பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 32 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9)அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.

10)யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும் என்பன அவையாகும்.

1990களில் யாழ்.முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் வீடுகள் (வைப்பகப் படம்)

ஆனால், தற்போது வரையில், இந்தக் கோரிக்கைகள் சீர்தூக்கிப் பார்க்கப்படவுமில்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவுமில்லை. தொடர்கின்றன அவலங்கள். நீடிக்கின்றன கோரிக்கைகள்.

-ஆர்.ராம்-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21