ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் சனிக்கிழமை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். 

சீனா தலைமையிலான இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, பிரேஸில், தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இம்முறை  இம்மாநாடு இந்தியா தலைமையில் கோவா நகரில் இடம்பெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்கிறார். 

ஐந்து நாடுகள் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை,மாலை தீவு,தாய்லாந்து, நேபாளம், பூட்டான், ஆப்பாகிஸ்தான் உட்பட 14 ஆசிய நாடுகளுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரான எட்டாவது மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. தற்போது இந்தியாவின் கோவா நகரில் நடைபெறுவது பின்ஸ்டெரிக்கின் ஒன்பதாவது மாநாடாகும். 

இதன்போது ஆசியாவின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக தலைவர்கள் விரிவாக ஆராயவுள்ளனர். சீன ஜனாதிபதி ஜின்பிங் உட்பட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உட்பட பல அரச தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடவுள்ளார். 

இந்திய ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜியுடனான சந்திப்பின்போது  எட்கா உடன்படிக்கையை  (தொழில்நுட்ப வர்த்தக பரந்துபட்ட புரிந்துனர்வு உடன்படிக்கை) இவ் வருட இறுதியில் கைச்சாத்திடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. 

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர, சர்வதேச முதலீட்டுக்கான ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்கிரம,  இந்தியா செல்கின்றனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார். 

பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு கோவா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.