(எம்.எம்.சில்வெஸ்டர்) 

திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையின் போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான வகுப்புகளையும் தினமும் நடத்தலாம். 

மாணவர்களின் எண்ணிக்கை 21 முதல் 40 வரை இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரம் இடைவெளியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

40 மாணவர்களுக்கு மேல் இருந்தால், மாணவர்களை மூன்று சம பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர்களுக்கு மாற்றுக் கற்றல் முறைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். 

கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் வழமைபோல் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் குறித்த விசேட சுற்று நிரூபம் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் மாகாணங்கள், வலயங்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரிகளுக்கும், அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.