உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்காமை : சஹ்ரானின் மாமனார், மைத்துனரிடம் விசாரிக்கசி நீதிமன்றம் அனுமதி

Published By: Digital Desk 3

05 Mar, 2022 | 11:54 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்களை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமை மற்றும் அத்தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த பல தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காமை ஊடாக தண்டனை சட்டக் கோவையின் 102 ஆம் அத்தியாயத்துடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்ட கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதா என விசாரணைகளில்,  குறித்த தாக்குதல்களின் முக்கிய குண்டுதாரியான சஹ்ரான் ஹசீமின் மாமனார் மற்றும் மைத்துனரிடம் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  

குளியாபிட்டிய நீதிவான் ஜனனி சஷிகலா விஜேதுங்க முன்னிலையில் பீ 1411/22 எனும்  இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்த போது,  விசாரணையாளர்களான சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர்  மெரில் ரஞ்சன் லமாஹேவா  முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி தற்போதும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,  சஹ்ரான் ஹசீமின் மனைவி ஹாதியாவின் தந்தையான ( சஹ்ரானின் மாமனார்) அப்துல் காதர் மொஹம்மட் ஹுசைனிடம்  இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை  வெலிக்கடை சிறையில் வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 இதனைவிட,   கைது செய்யப்பட்டு கேகாலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மைத்துனரான (சஹ்ரானின் மனைவியின் சகோதரன்)  அப்துல் காதர்  மொஹம்மட் அன்சாரிடம் இம்மாதம் 21 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடையில் விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின்  15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 124 மற்றும் 115 ( 4) ஆம் அத்தியாயங்களின் கீழ் இந்த சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி உதவி பொலிஸ் அத்தியட்சர்  மெரில் ரஞ்சன் லமாஹேவா,  பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷினி,  பொலிஸ் பரிசோதகர் இக்பால், பெண் பொலிஸ் பரிசோதகர்  மனேகா,  உள்ளிட்ட குழுவினருக்கு சிறைகளுக்கு சென்று  வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் அதாவது,  கடந்த 2019 பெப்ரவரி மாதம்  19 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய , இலக்கம் 383/2, கெக்குணகொல்ல, கெக்குணகொல்ல எனும் முகவரியில் உள்ள  சஹ்ரான் ஹசீமின் மனைவியான பாத்திமா ஹாதியாவுக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்ய  5 பேர் கொண்ட சி.ஐ.டி. குழுவினர் சென்றுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் செயற்பட்டு பயங்கர்வாதிகளைக் கைது செய்ய போதுமான அவகாசம் இருந்ததாக விசாரணைகளில் புலனாவதாக சி.ஐ.டி.யினர் நேற்று வழக்கு விசாரணையின் போது நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

அத்துடன் அப்போதைய சி.ஐ.டி.யின் உயர் அதிகாரிகள்  போதுமான  ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை அவர்களுக்கு வழங்கவில்லை என  மேலதிக விசாரணைகளில் தெளிவாவதால், அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

 நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவா மன்றில் ஆஜராகி விசாரணை தொடர்பில் விளக்கமளித்தார்.

 அதன்படி தற்போது கல்முனை  மேல் நீதிமன்றில் உள்ள எச்.சி. 653/21 எனும் வழக்குக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாத்திமா ஹாதியாவிடம்  கடந்த  பெப்ரவரி 12 ஆம் திகதிக்கும் 25 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில்  வைத்து 6 நாட்கள் விசாரணை செய்து  வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவா குறிப்பிட்டார். 

கடந்த பெப்ரவரி மாதம் 15,17,18,21,23 மற்றும் 25  ஆம் திகதிகளில் அவ்வாக்கு மூலம் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த நாட்களில் சி.ஐ.டி.யினர் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது, 2019 பெப்ரவரி மாதம்  19 ஆம் திகதி  சி.ஐ.டி.யின் அதிகாரிகள் சஹ்ரானை தேடி, அவர் மனைவிக்கு சொந்தமான கெக்குனுகொல்ல வீட்டுக்கு சென்ற போது அங்கு சாரா என அரியப்படும்  புலஸ்தினி மகேந்ரன் அல்லது சாரா ஜெஸ்மின் இருந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக  உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இதன்போது, சாரா ஜெஸ்மின் சஹ்ரானுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து விடயத்தை கூறியுள்ளதாகவும், அதன் பின்னர் அன்றைய தினம் இரவு வேளையில் தனது தந்தைக்கு அழைப்பெடுத்த  சஹ்ரான், தன்னையும் பிள்ளைகளையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறி அன்றைய தினம் இரவோடிரவாக வந்து காத்தாண்குடி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அழைத்து சென்றதாகவும் அவ்வாக்கு மூலம் ஊடாக சஹ்ரானின் மனைவி கூறியதாக சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் நீதிமன்றில் கூறினார்.

கெக்குனுகொல்ல வீட்டிலிருந்து காத்தாண்குடி வீட்டுக்கு சென்ற பிறகு,  சாரா ஜெஸ்மின் வெடிபொருட்களைக் கொண்டு குண்டு தயாரிக்கும் வேலைகளிலும், அடிப்படைவாத  வீடியோக்களை பார்த்து அவற்றை பிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக  சஹ்ரானின் மனைவியின் வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான், விசாரணைகலின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஏபரல் முதலாம் திகதி மன்றில் சமர்ப்பிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02