தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதறடிப்பதற்கான  பல்வேறு அபாய திட்டங்கள் தோன்றியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த சதியில் சிக்கியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில்  நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2001ஆம் தொடக்கம் 2015வரை 15 ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளை அனைவரும் ஏற்று ஒருமித்த முடிவாகவே செயற்பட்டுவந்துள்ளோம்.

நான் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.  கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்களை நாங்கள் விவாதித்தாலும் எடுக்கும் முடிவினை ஓரு முடிவாகவே எடுத்துள்ளோம்.

ஆனால் இந்த மைத்திரியின் நல்லாட்சிக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்த முடிவினை அந்த கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாமல் சென்ற வரலாறு இந்த முறையே நடைபெற்றுள்ளது.

 கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஒன்றுபட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை    கூட்டமைப்பினை சிதறடிப்பதற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது.