(எம்.எம்.சில்வெஸ்டர்)
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் வரையில், இந்த சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என ஐ.நா. நிபுணர் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடராமல் சிறைவாசம் அனுபவிப்போரை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் வியாழக்கிழமை (3) கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

"பயங்கராவத தடைச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் திருத்தத்தில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த தடைச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக கைவிடவேண்டும்.
இந்த தடைச் சட்டத்திற்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் காணப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை நல்லதொரு விடயமாகும்.
அண்மைக்காலமாக மக்கள் அனைவரும் இந்த சட்டத்தை நீக்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றமை சிறந்த விடயமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் வரையில் அல்லது முற்றாக திருத்தப்படும் வரையிலும் இந்த சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என ஐ.நா. நிபுணர் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.
இன்று இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுகின்றபோது, இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்" என்றார்.