எரிபொருளை தடையின்றி விநியோகிக்க துரித நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதி அவசர பணிப்புரை

By Vishnu

01 Mar, 2022 | 04:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறும், மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை தனியார் தரப்பினரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின்விநியோக தடை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள மின்சாரத்துறை அமைச்சு பொருத்தமான திட்டங்களை துரிதமாக செயற்படுத்த வேண்டும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அல்லது தனியார் தரப்பினரிமிருந்து மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்விநியோகத்தை துண்டிக்காமல் தடையில்லாமல் மின்விநியோகத்தை முன்னெடுக்க தேவையான நடடிவக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் கொள்வனவிற்கு தேவையான டொலரை விநியோகிக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பின்னர் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகத்தை துண்டிப்பது அவசியமற்றது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.

இம் மாதத்தின் இறுதி வாரமளவில் போக்குவரத்து சேவையில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சர் நம்பிக்கையளித்துள்ளார். 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக புகையிரதம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைக்காக எரிபொருள் விநியோகிப்பதை தவிர்த்து அதனை போக்குவரத்து அமைச்சிக்கு பொறுப்பாக்கும் வகையிலான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு மானிய விலையின் கீழ் எரிபொருளை விநியோகிப்பது குறித்தும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right