தமிழர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு பொது ஜனவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : 5 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

01 Mar, 2022 | 04:30 PM
image

(ஆர்.ராம்)

தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு வலிறுத்தி ஐ. நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லெட் அம்மையாருக்கு தமிழ்த் தேசியத் தரப்பில் உள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எழுத்துமூலம் அறிவிப்பை வெளியிட நீங்கள் தயாராகி வரும் நிலையில், ஐ.நா தீர்மானம் 46ஃ1, மார்ச் 2021 இல் இயற்றப்பட்டதில் இருந்து தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

2021 ஜனவரி 12 அன்று பொறுப்புக்கூறலைக் குறிப்பிட்டு குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல தெரிவுகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வெளியிட்டமைக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி 18, அன்று பகுப்பாய்வின் அடிப்படையில் காணப்படும் போக்குகளின் நீடித்த தேடலின் மையக் கூறுகளின் படி இலங்கையில் அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் மற்றும் உரிமை மீறல்கள் மற்றும் மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது வெகுஜன மனித உரிமைகளுக்கான நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைக்கான கட்டாய தேவையை உருவாக்குகிறது என்பதுள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்ட 20 முன்னாள் உயர்மட்ட ஐ.நா அதிகாரிகளின் பகிரங்க கடிதத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 2017 பெப்ரவரியில், தமிழ்ப் பெண்கள் ஈழவ்பாலியல் அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ ஈழவ்கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2013 ஏப்ரலில் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அறிக்கையின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர். 

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியது என்பதும் கூறப்பட்டுள்ளது.

தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிற அரசாங்க புலனாய்வு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். 

இந்த குடும்பங்களின் அமைதியான போராட்டங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன ஆகிய விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல முறையீடுகள் மற்றும் தீர்மானங்கள் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்து கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துகிறது.

தற்போதைய அரசாங்கத்தினால் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் தங்களின் தண்டனை அல்லது குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற விடயமும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள - பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தை குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு உங்களின் அன்பான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right