காணாமலாக்கப்பட்டமைக்கான காரணகர்த்தாக்களாக பாதுகாப்புத்தரப்பினரும் உள்வாங்கப்படும் வகையில் எமது அலுவலகச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் - மகேஷ் கட்டுலந்த

Published By: Digital Desk 3

01 Mar, 2022 | 05:10 PM
image

(நா.தனுஜா)

காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெருமளவானவை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் அல்லது பாதுகாப்புத்தரப்பினரால் அழைத்துச்செல்லப்பட்டவர்களுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. 

ஆனால் அத்தகைய சம்பவங்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் உண்மையிலேயே காணாமலாக்கப்பட்டார்களா? அல்லது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் அழைத்துச்செல்லப்பட்டார்களா? என்று ஆராயவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. 

இருப்பினும் தற்போதைய சட்டத்தின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின்கீழ் அதனைச் செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதனால், அதற்கேற்றவாறு சட்டத்தைத் திருத்தியமைக்கவேண்டிய தேவையிருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இதுவரை கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் 12 முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதற்கு ஏற்புடைய ஆதாரங்கள் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 650 முறைப்பாடுகள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காகத் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடம் மற்றும் அவசியமான முன்மொழிகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி ஆணைக்குழுவின் அமர்வில் ஆஜராகி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையில் அதன் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மகேஷ் கட்டுலந்தவினால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:

பாராளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் அதனூடாக கடந்த 2018 ஆம் ஆண்டில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அலுவலகமானது பரணகம ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலாக கடந்த காலங்களில் இயங்கிய 4 ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. 

அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டத்தின் பிரகாரம் அலுவலகத்தின் பணிகளுக்கென 255 ஊழியர்களை உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், தற்போது வெறுமனே 27 பேர் மாத்திரமே நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை காணாமல்போனோர் பற்றி அவர்களது உறவினர்களால் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென செயற்திறனான விசாரணைப்பிரிவொன்றை உடனடியாக உருவாக்கவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஓர் சுயாதீனக்கட்டமைப்பு என்பதால் அவ்விசாரணைப்பிரிவிற்கு பொலிஸ் அதிகாரிகளை உள்வாங்கமுடியாதநிலை காணப்படுகின்றது. 

ஆகவே சிவில் சமூகப்பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அப்பிரிவை உருவாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதேவேளை தற்போது எமது அலுவலகத்தின்வசம் சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் இருப்பதுடன் காணாமல்போன பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மாத்திரம் அவர்கள் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். 

அதுமாத்திரமன்றி இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் அனுபம் வாய்ந்தவர்கள், தமிழ்மொழி பேசக்கூடியவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்களையும் ஸ்தாபித்திருப்பதுடன் அக்குழுக்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதன்படி எமது அலுவலகத்திற்குத் தற்போதுவரை காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் 21,374 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதுடன் இவை கடந்த 1968 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் இனமோதல்களுடன் தொடர்புபட்டவையாகும். 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 12 பேர் காணாமல்போனதாகக் குறிப்பிடப்படும் தினத்திற்குப் பின்னர் வெளிநாடுகளுக்கான கடவுச்சீட்டு, வீசா மற்றும் டிக்கெட் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டமைக்கான தரவுகள் காணப்படுகின்றன. 

இருப்பினும் அவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள்தான் வெளிநாட்டிற்குச் சென்றார்களா? அல்லது அவர்களது பெயருடைய வேறு நபர்கள் சென்றார்களா? என்பது போன்ற தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அதேவேளை இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 3742 முறைப்பாடுகள் முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பிலிருந்து காணாமல்போனோர் பற்றியவையாகும். 

அவர்களது குடும்பங்களுக்கான உதவிகள் ஓரளவிற்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், காணாமல்போன சாதாரண சிவில் நபர்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்திவருகின்றோம். அதற்கமைய கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 650 முறைப்பாடுகள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காகத் தயார்நிலையில் உள்ளன.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெருமளவானவை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது கைளிக்கப்பட்டவர்கள் காணாமல்போனமை பற்றிய முறைப்பாடுகளாக இருக்கின்றன. எனவே இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டதாகவோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டதாகவோ கூறப்படும் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் அழைத்துச்செல்லப்பட்டார்களா? அல்லது காணாமலாக்கப்பட்டார்களா? என்று ஆராய்வதில் சிக்கல்கள் எமது அலுவலகம் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே இதனை விரிவான அடிப்படைகளில் திருத்தியமைக்கவேண்டிய அவசியமும் உள்ளது.

மேலும் தற்போது மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன. காணாமல்போனோர் தொடர்பில் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியிருக்கும் மாவட்டங்களில் இந்தக் கிளை அலுவலகங்களை விஸ்தரிப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

மறுபுறம் காணாமல்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் மரணச்சான்றிதழையோ அல்லது காணாமல்போனமைக்கான சான்றிதழையோ கோரும்பட்சத்தில், அதற்குரிய பரிந்துரை எமது அலுவலகத்தின் ஊடாக பதிவாளர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படும். பின்னர் பதிவாளர் நாயகத்தினால் சம்பந்தப்பட்டோருக்கு அச்சான்றிதழ் வழங்கப்படும். 

அண்மையகாலங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் தாமாகவே முன்வந்து எமது அலுவலகத்திடம் முறைப்பாடளிக்கும் வீதம் உயர்வடைந்துள்ளது. இருப்பினும் அவர்கள் ஏனைய சில தரப்புக்களாலும் அரசியல் தலைவர்களாலும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். 

எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் (குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள்) இடையில் காணப்படும் இடைவெளியைக் குறைப்பதன் ஊடாக இப்பிரச்சினை அரசியல்மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கமுடியும் என்பதுடன் இதற்குத் தீர்வுகாண்பதை இலகுபடுத்தமுடியும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51