(ஆர்.ராம்)
படப்பிடிப்பு எஸ்.எம்.சுரேந்திரன்
மன அமைதிக்காக யோகா, உடற்பயிற்சி என்று நாள்தோறும் செய்து வந்தாலும், அதற்கு இணையான பிரதிபலனை பயணமொன்றில் பெற்றுவிட முடியும்.
அந்தளவிற்கு சுற்றுலா பயணங்கள் வலிமையானவை. அது, மன அமைதியை ஏற்படுத்துகிறது, மன வலிமையை தருகின்றது, புதிய அனுபவங்களை வழங்குகிறது என்பார்கள் உளவியலாளர்கள்.
ஆனால் இலங்கையில் உள்ள இயற்கையின் கொடைகளை பார்த்து, இரசித்து அகமகிழ்வதற்காக வருகை தந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளில் உக்ரேன் பிரஜைகளுக்கு அண்மைய நாட்களில் மேற்படி கூற்று பொருத்தமற்றதாக மாறியிருக்கின்றது.
இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய பிரஜைகள் ஒவ்வொருவருக்கும், தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது? தமது உடைமைகளுக்கு என்ன நிகழ்ந்தது? தமது தேசத்தில் என்ன நடக்கின்றது? வெளியாகும் தகவல்கள் நிஜமானவையா? தாம் எவ்வாறு தாயகம் திரும்பப்போகின்றோம்? பிரிந்துள்ள அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திப்போமா? என்றெல்லாம் அடுத்தடுத்து கேள்விகள் நிறைந்தவையாகவே ஒவ்வொரு நொடிகளும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆம், உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்து ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் போர் நிலைமைகள் உக்கிரமடைந்து வருகின்றன என்று சர்வதேச செய்தி முகவரகங்கள் தொடர்ச்சியாக நேரலை அறிக்கையிடலைச் செய்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில், இலங்கையில் உள்ள பிரசித்தமான சுற்றுலாத் தளங்களில் பொழுதைக் கழிப்பதற்கான திட்டங்களுடன் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்திருக்கும் உக்ரேனிய பிரஜைகள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலனவர்கள், பேருவளை, அளுத்கம, பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள கடற்கரையை அண்மித்த பிரபல்யமான விடுதிகளில் தங்கியுள்ளார்கள்.
இவர்களை, நேரில் சந்தித்து சம்பாசனை செய்வதற்கு கடந்த சனிக்கிழமையன்று சந்தர்ப்பமொன்று கிட்டியது. “கிளப் பெந்தோட்டை” மற்றும் அதனை அண்மித்த விடுதிகளில் காலை உணவு நேரத்தின் போது அச்சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவர்களை நேரில் பார்த்தபோதே, தமது தாயக பூமியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உக்கிர மோதல்களால் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.
அதற்கும் அப்பால், உணர்ச்சிவசப்பட்டிருந்த அவர்களுடன் மெதுவாக சம்பாசனையை ஆரம்பித்தபோது, தமது தாயகத்திற்கு மீண்டும் திரும்ப முடியாத நிலையிலும், தொடர்ச்சியாக இலங்கையிலேயே தங்கியிருக்க முடியாத நிலையிலும் பெரும் நெருக்கடியில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தினர்.
பெரும்பாலனவர்கள், தமது சுற்றுலாப்பயணத்திற்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு தயாராகியிருப்பதாக கூறுகின்றார்கள்.
நேரடியாக உக்ரேன் தலைநகர் கிவிற்கு செல்ல முடியாது விட்டாலும் தம்மை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கோ அல்லது அண்மைய நாடுகளுக்கோ அனுப்பி வைக்குமாறு கோரி நிற்கின்றார்கள்.
“அழகிய இலங்கையைப் பார்க்கவே எனது கணவருடன் வந்தேன். அதற்கான காலம் நிறைவடைந்து விட்டது.
நாம் தங்கியிருக்கும் விடுதியில் மேலதிகமாக மூன்று நாட்கள் தங்குவதற்கு அனுமதித்துள்ளார்கள். அதன் பின்னர் என்ன செய்வதென்றே தெரியாதுள்ளது.
எனது பிள்ளைகள் இருவரும் உக்ரேனில் தனியாக உள்ளார்கள்”
நட்டாலி :
போர் மீதான வெறுப்பால் சிலர் ரஷ்யாவுக்கு செல்ல முடியாது என்று கூறினாலும் பலர், சகோதார நாடாக ரஷ்யாவைப் பார்ப்பதாகவும் குறைந்த பட்சம் அங்காவது தம்மை கொண்டு சென்று சேர்க்குமாறும் வலியுறுத்துகின்றனர்.
தற்போதைய நிலையில் தாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலம் நிறைவடைந்துள்ளது.
கையில் போதிய பணமும் இல்லை. பயண முகவர், விமான நிறுவனங்கள் பயணச்சீட்டுக்களை மாற்றுவதற்கு தொடர்பு கொண்டாலும் உரிய பதில் அளிப்பதாக இல்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டார்கள்.
பயணச்சீட்டுக்களை வழங்கும் முகவர் மற்றும் விமான நிறுவனங்களையும், புறப்படுகைக்கான நேரத்தினையும் மாற்றிமாற்றியே பெருந்தொகை பணத்தினை இழந்து விட்டதாகவும் எனினும், தாம் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான எந்தச் சமிக்ஞையும் கிடைத்தபாடில்லை என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
அதேநேரம், அண்மைய நாட்களில் வருகை தந்தவர்கள். நிறைவாக மனோநிலையுடன் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லவோ, நேரத்தினை செலவிடவோ கூடிய மனநிலையில் இல்லையென்றும் குறிப்பிடுகின்றனர்.
“எமது நாட்டில் போர் வெடித்து விட்டது. இப்போது அங்கு மீண்டும் செல்வதற்கு வழியில்லை.
விமான நிறுவனங்கள் பதிலளிப்பதாக இல்லை. எங்களின் அன்புக்குரியவர்கள் நெருக்கடியில் உள்ளார்கள்.
இலங்கை அரசாங்கத்திடம் கைகூப்பிக் கோருகின்றோம். எங்களை போலந்தோ, ஜேர்மனோ எதேவொரு நாட்டிற்கு அனுப்பி வையுங்கள்”
ஹட்சவித்தாலி :
பிள்ளைகள் தமது பெற்றோருக்கு என்னவாகியதோ என்றும், பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு என்னவாகியதோ என்றும் ஏங்கிங் கொண்டு இருக்கின்றார்கள்.
ஏனையவர்களும் தமது அன்புக்குரியவர்களின் நலன்களை தொடர்ச்சியாக விசாரித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
இதனால், பெரும்பாலானவர்கள் விடுதியில் உள்ள அறைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து தொலைக்காட்சியலும், தொலைபேசியிலும் செய்திகளைப் பார்ப்பதும்,
சொந்தங்களுக்கு அழைப்பு எடுப்பதுமாக காலத்தினை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் உக்ரேனியர்களின் பாதுகாப்பில் விசேட கவனத்தினைச் செலுத்தியுள்ளது.
நாட்டிற்குள் ரஷ்ய நாட்டுப் பிரஜைகளும் கணிசமான அளவில் இருப்பதாலும், ஒரே விடுதியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் தங்கியிருப்பதாலும் முரண்பாடுகள் ஏற்பட்டு விபரீதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்கின்றது.
இதற்காக விசேட கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனைவிடவும், இலங்கையர்களுக்கே உரிய உயரிய பண்பான, விருந்தோம்பல் உக்ரேனிய பிரஜைகளுக்கு ஆபத்தில் உதவியுள்ளது. தற்போதைக்கு விடுதிகள் அந்தப் பணியை முன்னெடுக்கின்றன.
எனினும், உள்நாட்டில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சாரம், மருந்துப்பொருட்கள் என்று எத்தனையோ நெருக்கடிகள் இருந்தாலும், சுற்றுலாப் பிரதேசத்தினை அண்மித்துள்ள சதாரண பொதுமக்கள் உக்ரேனிய பிரஜைகளை தமது வீடுகளில் வைத்துப் பராமரிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்கள்.
ஆனால், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது, உக்ரேனில் நிலைமைகள் மேலும் மோசமடைந்தால் உக்ரேன் பிரஜைகளை தங்கவைப்பதற்காக சதாரண விடுதிகளில் தங்கவைக்கும் நோக்குடன் விடுதிகளின் உரிமையாளர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
கொரோனா பரவலால் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் நட்சத்திர விடுதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இலவச சேவையை அவர்களுக்கு வழங்க முடியாது என்பது யதார்த்தமானதும் கூட. அதேநேரம், ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ், உக்ரேனிய பிரஜைகளை மீண்டும் தாயகம் கொண்டு சென்று சேர்ப்பதற்கான தனது சேவைகளை முன்னெடுப்பது பற்றிய பூர்வாங்கப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
எனினும்,பல உக்ரேனிய பிரஜைகள் இரண்டாவது நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றமையால் அவர்கள் மீளச் செல்வதில் சில சிக்கல்கள் இல்லாமலில்லை.
எது, எவ்வாறாயினும் தற்போதைக்கு உக்ரேனிய பிரஜைகளின் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் அவர்கள் பகுதிபகுதியாக தாயகத்திற்கு அண்மித்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அதுவரையில், அவர்களுக்கு தேவை உணவோ, பானமோ, பணமோ அல்ல. மன ஆறுதலே. அந்த ஆற்றுப்படுத்தல் பணியை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், இலங்கை அரசாங்கமும் தான்.
ஏனென்றால், இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டெழுவதற்கு சவாலான நேரத்தில் முதலடியை எடுத்துவைத்தது ரஷ்யா மட்டுமல்ல உக்ரேனும் தான் என்பதை மறுதலிக்க முடியாது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கிமர்லி பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,
“ரஷ்யா, உக்ரேன் இடையில் போர் மூண்டுள்ள தருணத்தில் எமது நாட்டில் 11ஆயிரத்து 463 ரஷ்ய பிரஜைகளும், 3ஆயிரத்து 903 உக்ரேனிய பிரஜைகளும் இருக்கின்றார்கள்.
இவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளார்கள். இவர்களில் ரஷ்யப் பிரஜைகள் மீண்டும் நாடு திரும்புவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
ஆனால் உக்ரேனிய பிரஜைகள் மீண்டும் செல்வதில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றன.
இதானால் அவர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது அவர்களை நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்காக பல்வேறு மட்;டங்களில் செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.
குறிப்பாக, தங்கியுள்ள உக்ரேனிய பிரஜைகளில் அதிகமானவர்களுக்கு விசா நிறைவுக்கு வருகின்றது.
ஆகவே இலங்கையில் உள்ள அனைத்து உக்ரேனியர்களுக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்தவிதமான கட்டணங்களுமின்றி விசா நீட்டிப்புச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கான அமைச்சரவை பத்திரத்தினை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளார்.
இதேவேளையில், உக்ரேனிய பிரஜைகளில் பலரின் திட்டமிட்ட சுற்றுலாப் பயணத்திற்கான காலம் நிறைவுக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் தங்குவதற்கு ஒதுக்கீடு செய்த விடுதிகள் மற்றும் வாடகைக்கு அமர்த்திய வாகனங்கள் ஆகியவற்றின் காலம் நிறைவுக்கு வந்துள்ளது.
அத்துடன், அவர்களில் சிலரிடத்தில் பணப்பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
இவ்விதமான பிரச்சினைகளை முகங்கொடுத்துள்ளவர்களுக்கு அப்பிரஜைகள் தங்கியுள்ள விடுதிகளே அனைத்து வசதிகளுடன் குறிப்பிட்டளவு கால நீடிப்பினை இலவசமாக வழங்கியுள்ளன.
மேலும் பல சதாரண விடுதிகளின் உரிமையாளர்கள் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்கள்.
சுற்றுலாத்தளங்களுக்கு அண்மையில் உள்ள பொதுமக்கள் தமது வீடுகளில் வைத்துப் பராமரிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தாலும் சதாரண மக்கள் தமது விருந்தோம்பல் பண்பை உயந்த மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளமையையிட்டு இலங்கையர்களாக நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
அதேநேரம், ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரையில் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளில் 8.7சதவீதமனவர்கள் உக்ரேனைச் சேர்ந்தவர்கள்.
15.8சதவீதமானவர்கள் உக்ரேனைச் சேர்ந்தவர்கள். எனவே, அந்நாடுகளில் போர் நிலைமைகள் நீடிக்குமாயின் எதிர்காலத்தில் அந்நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படும்.
அவ்விதமான நிலைமையானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்மறையாக கொள்ளவேண்டியதில்லை.
2022ஆம் ஆண்டில் 1.1மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதே அதிகாரசபையின் இலக்காகும்.
ரஷ்ய, உக்ரேன் நாடுகள் அண்மைய காலத்தில் இலங்கை சுற்றுவலத்துறை மீண்டெழுவதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது என்பதற்காக அனைத்துமே முடிவுக்கு வந்து இருள் சூழ்ந்து விட்டது என்று கொள்ள வேண்டியதில்லை.
மாற்றுவழிகளைக் கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, மத்தியகிழக்கு, தென்னிந்தியா, சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஷ், உள்ளிட்ட நாடுகளை நோக்கிய எமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளோம்.
முதற்கட்டமாக பங்களாதேஷைச் சேர்ந்த நான்கு எழுத்தாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கை சுற்றுலாத்துறை குறித்த விடயங்களை தமது நாடுகளில் வெளிப்படுத்தி ஊக்குவிக்கவுள்ளனர்.
அடுத்த கட்டமாக, மார்ச் நான்காம் திகதி டுபாயில் இசைநிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் யொஹானி பங்கேற்கின்றார். பின்னர் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் சுற்றுலா அதிகாரசபை இருதரப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுகிறது.
ஏப்ரல் மாதத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 500பயண முகவர் நிறுவனங்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளன.
அவை அடுத்துவரும் காலத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கவள்ளன.
அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் ஏயர் லைன்ஸுடன் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் சுற்றுலா ஊக்குவிப்பு பிரசாரங்கள் இடம்பெறவுள்ளன.
ஆகவே மாதமொன்றுக்கு 80ஆயிரம் வரையிலான சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்தால் எமது இலக்கினை அடைந்து கொள்ள முடியும் அதற்கு நேர்மறையான சிந்தனையே முதலில் அவசியம்” என்றார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குறிப்பிடுகையில்,
“ரஷ்ய, உக்ரேன் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அதன் தாக்கம் வெகுவாக ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதலாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் உக்ரேனும் உள்ளன.
அந்த வகையில், உக்ரேனிலிருந்து வருகைதந்துள்ள நான்காயிரம் வரையிலான சுற்றுலாப்பயணிகளில் குறிப்பிட்ட அளவானர்கள் இரண்டு, மூன்று மாதங்கள் தங்கியிருக்கும் வகையில் இங்கு வந்துள்ளார்கள். அவர்களின் விடயங்களை இரண்டாவது கட்டத்தில் கையாள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், முதற்கட்டமாக, திட்டமிட்ட பயணம் நிறைவுக்கு வந்தவர்கள் அடுத்த சில நாட்களில் நிறைவுக்கு வரவுள்ளவர்கள், அன்புக்குரியவர்களை பிரிந்து நிற்பவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள், டுபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இரண்டாவது நாட்டுக்குச் சென்றே இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.
இவ்விதமானவர்களால் தற்போது மீண்டும் நாட்டுக்குச் செல்ல முடியாதிருக்கின்றது.
அவர்களின் பயணங்களுக்கான விமானச்சீட்டுக்களை வழங்கிய விமான நிறுவனங்களும் தற்போது மௌனம் காத்துவருகின்றன. இது பொருத்தமான செயற்பாடொன்றல்ல.
இந்நிலையில், இலங்கையில் உள்ள உக்ரேனிய பிரஜைகள் தமது சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு முடியது விட்டாலும், அருகில் உள்ள போலந்து, ஜேர்மன், மல்டோவா, மொஸ்கோ போன்றவற்றிலாவது தம்மை கொண்டுசென்று சேர்க்குமாறு கோருகின்றார்கள்.
ஆகவே விமான நிறுவனங்கள் அதுபற்றி மறுபரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதுபற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர், சுற்றுலாச் சபையின் தலைவர், மற்றும் ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் பிரதானி உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் அவர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியுள்ளனர்.
இதனை விடவும், விடுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கால எல்லை நிறைவடைந்துள்ளமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.
கொரோனா தாக்கம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு ஏற்கனவே முகங்கொடுத்துள்ள விடுதிகள் சொற்ப அளவில் காலநீடிப்பை வழங்கி இலவச சேவைகளை வழங்குகின்றன.
எனினும், பேருவளை, அளுத்கம, பெந்தோட்டை பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், மற்றும் கிரமமக்கள் உக்ரேனிய பிரஜைகளை தம்முடன் வைத்து இலவசமாக பராமரிப்பதற்கு முன்வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனை விடவும், குருநாகலில் உள்ள விகாரதிபதியெருவர், காலியில் உள்ள தனியார் விடுதி உரிமையாளர் ஆகியோர் தலா 500பேரை இலவசமாக பராமரிப்பதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்விதமாக முன்வந்துள்ளவர்களுக்கும், எதிர்வரும் நாட்களில் வரவுள்ளவர்களுக்கும் நன்றிகளை கூறுவது மட்டுமன்றி, அவர்களின் உயரிய மனோபாவத்தினையிட்டு நாம் பெருமைகொள்ள வேண்டியுமுள்ளது.
உண்மையில் தற்போதைய தருணத்தில் இலங்கையர்களாக நாம் ரஷ்ய, உக்ரேனிய பிரஜைகளுக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில், குமிழ் முறையில் எமது நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டெழச் செய்வதற்கான பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, ரஷ்ய, உக்ரேன் பிரஜைகளே ஆபத்துக்களை சவலாக எடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளித்தது.
அவர்களின் வருகை அளித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனவரி 21இல் எமது விமான நிலையத்தினை மீண்டும் திறந்தோம்.
அவ்விதமானவர்கள் தற்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எமது கடமையாகின்றது.
அந்த வகையில் நான் கடந்த இரண்டு தினங்களாக உக்ரேனிய பிரஜைகள் அதிகமாக தங்கியுள்ள கிளப் பெந்தோட்டை விடுதியில் முழுநேரத்தினையும் செலவிட்ட வண்ணமுள்ளேன்.
அவர்களின் கோரிக்கைகள், கவலைகள், பிரதிபலிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் செவிமடுத்து என்னாலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். தங்களின் அன்புக்குரியவர்களை, உடைமைகளை விட்டு அவர்கள் உளவியல் ரீதியாக துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் தேவைகள் அத்தனையையும்; உடனடியாக நிறைவேற்ற முடியாது விட்டாலும், ஆகக்குறைந்தது, அவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகளையாவது உடன் இருந்து பகிர்ந்து கொள்ளமுடிகின்றது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM