உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை குறித்து பாப்பரசருக்கு பேராயர் விளக்கம்

By T Yuwaraj

01 Mar, 2022 | 06:44 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , அது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள இலங்கை கத்தோலிக்கர்கள் முன்னெடு;த்த நீதிக்கான போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

Image

இலங்கை நேரப்படி திங்கட்கிழமை (28) மாலை 3 மணிக்கு பரிசுத்த பாப்பரசர் மற்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே பேராயர் இவ்விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி ஜே.டீ.அன்தனி ஜயக்கொடி தெளிவுபடுத்துகையில் ,

Image

இதன் போது மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள போதிலும் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை தொடர்பிலும் , உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் அதற்காக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாப்பரசருக்கு தெளிவுபடுத்தப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் உதாசீனம் செய்து வருகின்றமை தொடர்பிலும் பேராயர் இதன் போது பாப்பரசருக்கு தெளிவுபடுத்துவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது இலங்கைக்குள் எந்தளவிற்கு சாத்தியப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளமையால் , அதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான அவசியம் தொடர்பிலும் பேராயர் இதன் போது தெளிவுபடுத்துவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதை விட , சட்டத்தின் முன் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை இனங்காண்பது கடினதாக இருக்கும் என்பதே தற்போது சிலரது நிலைப்பாடாகக் காணப்படுகிறது. காரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடைமுறைகள் இலங்கைக்குள் தோல்வியடைந்துள்ளன. மூன்று வருடங்களாக நாம் இதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைக்கும் அறிக்கையை மிகவும் பொறுமையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தோம். குறிப்பாக தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு உதவியவர்கள் , அதனை உதாசினப்படுத்தியவர்கள் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது? ஜனதாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது நியாயமற்ற எதிர்பார்ப்பல்ல.

இதற்காக நாம் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் , எமக்கிருக்கும் ஒரேயொரு மாற்றுவழி சர்வதேசத்தை நாடுவது மாத்திரமேயாகும். இதனை கடந்த வாரம் இலங்கை ஆயர் பேரவையும் அறிக்கையூடாக தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை நாட்டின் மீது நேசமின்றி நாம் முன்னெடுக்கவில்லை. எமது தேவை நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொள்வது மாத்திரமேயாகும். பரிசுத்த பாப்பரசருடனான கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் , பாப்பரசரது நிலைப்பாடு தொடர்பிலும் உரிய காலத்தில் தெளிவுபடுத்தப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்