சர்க்கரை நோய் பாதிப்புக்குரிய சிகிச்சை

By T Yuwaraj

28 Feb, 2022 | 07:28 PM
image

இன்றைய திகதியில் உலக அளவில் மில்லியன் கணக்கிலான சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் புதிதாக உருவாகிறார்கள் என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளில் வகை 1, வகை  2, ஜெஸ்டேஷனல் டயபட்டிஸ் ஆகிய மூன்று வகையான நோயாளிகளை பற்றி அறிந்திருப்போம். ஆனால் தற்போது ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்ற சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்பது புதிய வகை சர்க்கரை நோய் அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டைப் 1 சர்க்கரை நோயாளிகளில் ஆயிரத்தில் மூவருக்கு இந்த வகையான பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிக அளவு வித்தியாசத்துடன் இருக்கும்.

அதாவது கணக்கிடும்போது இந்த வகையான நோயாளிகளுக்கு 280, 290 என்ற அளவை காட்டும். சில மணித்துளிகளில் அவர்களது ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட மிகவும் கீழான எண்ணிக்கையில் இருக்கும். இதுபோன்ற திடீரென விரைவான சமச்சீரற்ற நிலையில் ரத்த சர்க்கரையின் அளவு இருப்பதைத்தான் ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்களைவிட பெண்களை அதிக அளவில் தாக்கும் இந்த வகையான சர்க்கரை நோயை மருத்துவர்கள் Labile Diabetes என்றும் குறிப்பிடுவார்கள்.

குடலை பாதிக்கும் செலியாக் நோய் தொற்று உள்ளவர்கள், போதைப்பொருள் மற்றும் மதுபானத்தை தொடர்ச்சியாக பாவனை செய்பவர்கள், வயிற்றில் உள்ள உணவை காலியாவதை தடுக்கும் நரம்பியல் சேதமுடைய காஸ்றோபரேசிஸ் என்ற பாதிப்புள்ளவர்கள், அட்ரீனல் மற்றும் தைராய்டு சுரப்பி சமச்சீரற்ற நிலையில் உள்ளவர்கள், உண்ட உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை இன்சுலின் வழியாக உறிஞ்சுவதில் கோளாறு உடையவர்கள், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு இத்தகைய பிரிட்டில் டயபடீஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் உண்டு.

தலைசுற்றல், சமச்சீரற்ற இதயத்துடிப்பு, எரிச்சல் அல்லது குழப்பம், வியர்வை, திடீர் பசி, அமைதியற்ற தூக்கம், வெளிறிய தோல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக கலந்து ஆலோசனை செய்து சிகிச்சை பெற வேண்டும். வேறு சிலருக்கு மங்கலான பார்வை, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, தாகம் ஆகிய அறிகுறிகள் உள்ளவர்களும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களும் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், குழப்பம், நீர்ச்சத்து குறைபாடு, வேகமான இதயத்துடிப்பு, சுவாசிப்பதில் கோளாறு, வாந்தி ஆகியவற்றுடன் சிலர் கோமா நிலைக்கும் சென்று விடக்கூடும். 

இவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையுடன் தொடர் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். இன்சுலின் பம்ப் எனப்படும் கருவியை உடலில் பொருத்திக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு பிரிட்டில் டயாபடீஸ் பற்றிய முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் இதற்கு சிகிச்சை பெற வேண்டும். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பின் காரணமாக கணைய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேணடியதிருக்கும். அத்துடன் மருத்துவர்கள் அறிவுரையை முழுமையான விழிப்புணர்வுடன் பின்பற்றினால் இதனை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

டொக்டர். சிவபிரகாஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right