சிறந்த ஏற்றுமதியாளராக ரிச்சர்ட் பீரிஸ் நச்சுரல் ஃபோம்ஸ் தெரிவு

Published By: Priyatharshan

12 Oct, 2016 | 01:45 PM
image

இலங்கையின் முன்னணி லடெக்ஸ் ஃபோம் தயாரிப்புகள் உற்பத்தியாளரான ரிச்சர்ட் பீரிஸ் நச்சுரல் ஃபோம்ஸ் லிமிட்டெட், ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை அண்மையில் நடைபெற்ற NCE ஏற்றுமதியாளர் விருதுகள் நிகழ்வின் போது தனதாக்கியிருந்தது. 

விவசாய பெறுமதி சேர் துறையில் தங்க விருதையும் இறப்பர் உற்பத்திகள் உப பிரிவு (மிகப்பெரிய பிரிவு) தங்க விருதையும் இந்நிறுவனம் தனதாக்கியிருந்தது.

24 ஆவது வருடாந்த ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வு, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பொது வர்ததக நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த சாதனை தொடர்பில் ரிச்சர்ட் பீரிஸ் நச்சுரல் ஃபோம்ஸ் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜானுக கருணாசேன கருத்துத் தெரிவிக்கையில்,

“NCE ஏற்றுமதியாளர் விருதுகள் 2016 இல் சிறந்த ஏற்றுமதியாளராக தெரிவாகியிருந்ததுடன் மூன்று தங்க விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். 

எமது பிரத்தியேகமான, சர்வதேச ரீதியில் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள், உலக சந்தையில் 43 க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றதுடன், உள்நாட்டு சந்தையிலும் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்த வண்ணமுள்ளது” என்றார்.

“எமது மெத்தைகள் சூழலுக்கு பாதுகாப்பானவை என்பதுடன், சொகுசானவையாக அமைந்துள்ளன. எமது தயாரிப்புகள் உள்நாட்டு இறப்பர் துறைக்கு 95 வீதம் பெறுமதி சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. சுமார் 20,000 ஏக்கர் பகுதியிலிருந்து இவை பெறப்படுகின்றன” என மேலும் தெரிவித்தார்.

பியகம தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரிச்சர்ட் பீரிஸ் நச்சுரல் ஃபோம்ஸ் லிமிட்டெட், சிறந்த லடெக்ஸ் ஃபோம் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. 

இவற்றில் இயற்கை லடெக்ஸ் ஃபோம் மெத்தைகள், டொப்லர்கள், தலையணைகள் போன்றன அடங்குகின்றன. வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, கொரியா, தாய்வான், மலேசியா, தாய்லாந்து, சீனா, இந்தியா மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு இந்த தயாரிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன.

“நாம் ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள எம்மை அர்ப்பணித்துள்ளோம். 

இதன் மூலம் லடெக்ஸ் ஃபோம் தயாரிப்புகளின் தரம் மற்றும் சௌகர்யம் போன்றன உறுதி செய்யப்படுவதுடன், தொடர்ந்து இதை முன்னெடுத்துச் செல்ல நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தர உறுதிப்படுத்தல், ஃபோமிங் மற்றும் கழுவுதல், உலரை வைத்தல், தரப்பரிசோதனை மற்றும் ஃபெப்ரிகேஷன் போன்றவற்றின் ஊடான பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விநியோகம் போன்ற செயற்பாடுகளின் மூலமாக உலகத்தரம் வாய்ந்த 100 வீதம் லடெக்ஸ் இயற்கை மெத்தைகளை உற்பத்தி செய்து வருகிறது. 

ECO Institute, LGA Quality Test Germany, Oeko-Tex Switzerland, ABC, STROKE-USA, SATRA UK மற்றும் GOLS-Netherlands போன்ற பரிசோதனை அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

1986 ஆம் ஆண்டு வியாபாரிகளால் இணைந்து ஸ்தாபிக்கப்பட்ட NCE என்பது, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒரே தனியார் துறை சம்மேளனமாக திகழ்கிறது. பொருளாதார அபிவிருத்தியை எய்துவதற்கு அவசியமான அரசின் ஏற்றுமதி இலக்குகளை எய்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. 

இதன் அங்கத்துவத்தில் முன்னணி ஏற்றுமதி வியாபாரங்கள் உள்ளடங்கியுள்ளன. “ஏற்றுமதியாளர்களின் குரல்” எனவும் இது அழைக்கப்படுகிறது.

வருடாந்த NCE ஏற்றுமதி விருதுகள் என்பது, இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் முயற்சிகளை கௌரவித்து, வெகுமதியளித்து வருகிறது. இதில் பல வியாபாரங்களின் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அதிதிகள் அடங்கலாக விசேட விருந்தினர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right