வெவ்வேறு வாகன விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட அறுவர் பலி

By T Yuwaraj

27 Feb, 2022 | 04:47 PM
image

நாட்டில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞர்கள் இருவர் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வராவல, கலிகமுவ பிரதான வீதியின் தலொவிட்ட பிரதேசத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக்கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதசாரியொருவர் மீது மோதி பின்னர் மின் கம்பத்தில் மோதியுள்ளது. 

இந்த விபத்தின் போது காயமடைந்த இருவரும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 20 வயதுடைய பத்தெவெல, ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சீதுவ

சீதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீர்கொழும்பு- கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த கொள்கலன் ஏற்றிச்செல்லும் வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகி;ச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய முன்னக்கரய, நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்;ந்தவராவார். இருவரின் கவனயீனமே விபத்துக்காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் கொள்கலன் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹபராதுவ

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி-மாத்தறை பிரதான வீதி மிஹிரிபென்ன பிரதேசத்தில் காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் எதிர் திசையில் வந்த சிறியரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய கதலுவ, அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் ஹபராதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வெள்ளவத்தை

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி- கொழும்பு பிரதான வீதி விவேகனாந்தா சந்தியில் தனியார் பேரூந்தொன்று பாதசாரியொருவர் மீது மோதியதில் காயமடைந்த பாதசாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடைய பமண, யாவக்க பகுதியை சேர்ந்த பெண் ஒருவராவார். குறித்த பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு வெள்ளவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரத்தினபுரி

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்தினபுரி பெல்மடுல்ல பிரதான வீதியின் லெல்லுபிடிய பிரதேசத்தில் இரத்தினபுரி நோக்கி பயணித்து கொண்டிருந்த ஜீப் ரக வாகனம் மோதி பெண் ஒருவர்

உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 77 வயதுடைய லெல்லபிடிய, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். குறித்த ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவித்தபுரம் பிரதேசத்தில் புகையிரத கடவைக்கு அருகில் கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 44 வயதுடைய பண்டதிரிப்பு, இலாவலி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். காங்கேசன்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right