(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் இந்தியாவிடம் சரணாகதியடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் , வலு சக்தி துறையில் அதன் இயலாமையையும் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளமையின் காரணமாகவே ஐ.ஓ.சி. நிறுவனம் அதன் போக்கில் எரிபொருள் விலைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நாட்டில் வலு சக்தி துறையில் தீர்மானங்களை எடுக்கக் கூடிய பிரதான நிறுவனமாக ஐ.ஓ.சி. நிறுவனம் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பற்றி கருத்து வெளியிடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலகட்டத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் , காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதையும் மறந்து விடக் கூடாது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஒரே மாதத்திற்குள் இரு சந்தர்ப்பங்களில் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும் , ஐ.ஓ.சி. நிறுவனம் அதன் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் நாட்டில் வலு சக்தி தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் பிரதான நிறுவனமாக ஐ.ஓ.சி. நிறுவனம் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
பெற்றோலிய சட்டத்தின் படி எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விலை என்பவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினாலேயே தீர்மானிக்கப்படும்.
ஆனால் ஐ.ஓ.சி. நிறுவனம் அதன் தீர்மானத்திற்கமைய எரிபொருள் விலைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இயலாமையையும் , அரசாங்கம் இந்தியாவிடம் சரணாகதியடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளமையின் காரணமாகவே ஐ.ஓ.சி. நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
மின்சாரத்துறையிலும் இதே நிலைமையே காணப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தால் அதனை பழுது பார்ப்பதற்கு சீனர்கள் அழைக்கப்படுகின்றனர்.
மறுபுறம் யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் 40 சதவீதம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வலுசக்தி துறையில் அரசாங்கம் செயழிலந்துள்ளது என்பதை ஐ.ஓ.சி. நிறுவனம் நன்கு புரிந்து கொண்டிருக்கிறது.
அதன் காரணமாகவே அரசாங்கத்தை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் விலைகளை அதன் போக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதே நிலைமை தொடருமாறும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடு முழுமையாக முடங்கும். தற்போதைய அரசாங்கமும் இதற்கு முன்னர் காணப்பட்ட ராஜபக்ஷ ஆட்சியிலும் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் நாடு அராஜக நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஒரு புறம் பணவீக்கம் அதிகரித்துச் செல்ல மறுபுறம் பொருட்களின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன. டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இவ்வாறான நிலைமையால் இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து நிதி அமைச்சர் , ஜனாதிபதி செயலாளர் , மத்திய வங்கி ஆளுனர் என எவரிடம் பேசினாலும் தீர்வுகள் கிட்டவில்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு அரசாங்கத்திற்குள்ளேயும் எவ்வித கலந்தாலோசனைகளும் இடம்பெறுவதில்லை. நிதி அமைச்சர் பங்கேற்கும் கலந்துரையாடல்களை மத்திய வங்கி ஆளுனர் புறக்கணிப்பதோடு , மத்திய வங்கி ஆளுனர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களை நிதி அமைச்சர் புறக்கணிப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
தற்போது சகல அமைச்சர்களும் கடன் கோரி வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அபிவிருத்திகளுக்காவே வெளிநாடுகளிடம் கடன் பெற்றன. ஆனால் தற்போதைய அரசாங்கம் உணவிற்காக கடன் கேட்டுச் செல்கிறது.
இவ்வாறு இலங்கையை ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ணும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளியுள்ளது. இலங்கை மீது உலகத்தின் மத்தியில் காணப்பட்ட நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னுரிமையளித்து தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படும் போது அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது.
மின் துண்டிப்பை நிறுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாமையின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
2019 இல் நாம் ஆட்சியை ஒப்படைக்கும் போது 7.5 பில்லியன் டொலர் இருப்பு காணப்பட்டது. எனினும் இந்த அரசாங்கம் அதன் தனவந்த சகாக்களுக்கு இலாபத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக வரியை நீக்கி , வட் வரியை நீக்கி 600 - 700 மில்லியன் டொலர் அரச வருமானத்தை இல்லாமலாக்கிக் கொண்டது.
இதன் காரணமாகவே தற்போது அந்நிய செலாவணி இருப்பு முழுமையாகக் குறைவடைந்துள்ளது. இதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியுமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றி கருத்து தெரிவிக்கும் தற்போதைய ஜனாதிபதி , பாதுகாப்பு செயலாளராக இருந்த கால கட்டத்திலேயே ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயார் கொல்லப்பட்டனர் என்பதையும் , பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் என்பதையும் , சிரச மற்றும் சியத நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் , வடக்கு ஊடகவியலாளர் சிவராம் கொல்லப்பட்டார் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது ஊடகவியலாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதும் , சிவில் செயற்பாட்டாளர்களை வெள்ளை வேனில் வந்து கைது செய்வதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் என்பதை இதுவரையிலும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுபவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்படுகின்றனர். நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று அற்ற நிலைமையே காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM