ஜெனிவா கூட்டத்தொடர்களின் போது, நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம் ஒரு திட்டத்தை தயாரிக்கும் போது இன்னொரு பொறி அங்கு புதிதாக தயாராகிறது.
ஆரம்பத்தில், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல், நீதி விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றில், பிரதானமானது, போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல் மற்றும் அதனைச் சார்ந்த விடயங்கள் தான்.
அதற்காக காலஅவகாசங்கள் வழங்கப்பட்ட போதும், காலஅவகாசம் கோரப்பட்ட போதும், ஜெனிவா அழுத்தங்கள் இன்னும் விரிவடையத் தொடங்கின.
குறிப்பாக ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், இராணுவ மயமாக்கல், நிலஅபகரிப்பு, என்று அது பல வழிகளில் நெருக்கடிகளைக் கொடுக்கின்ற ஒன்றாக மாறியது.
அவ்வாறு தான், இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பிக்கும் அறிக்கையில், போர்க்குற்ற விசாரணை சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை இருக்காது என்பது தெரிந்த விடயம் தான்.
ஏனென்றால், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்து விட்டது.
எனினும், பொறுப்புக்கூறல் சார்ந்து, இலங்கை அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்பது வெளிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, பொறுப்புக்கூறல் நடவடிக்கையைச் சார்ந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஏற்கனவே சாட்சியங்களையும், ஆதாரங்களையும் திரட்டுகின்ற ஒரு பணியை தொடங்கியிருக்கிறது.
அதன் முன்னேற்றங்களையும், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரால், முழுமையாக பகிரங்கப்படுத்த முடியாது.
இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஒரு பரவலான அறிக்கையை தாக்கல் செய்வார் என்று அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
அந்த அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது.
ஏனென்றால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பலர் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கோ, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டத்தை உருவாக்குவதற்கோ, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
இதனைச் சார்ந்தே, இம்முறை கூட்டத்தொடரை சமாளிப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்ட திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம், தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
ஆனால், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் போதுமானதல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அதைவிட, இந்தமுறை புதிதாக முளைத்திருக்கிறது ஒரு பிரச்சினை. அது கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்ட ஒன்றின் தொடர்ச்சி தான்.
அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் தான், அதற்கான விதையைப் போட்டிருகிறது.
சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம்.
சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் பிரதான அங்கங்களில் ஒன்று.
ஒரு நாட்டுக்கு, அரசாங்கம், பாராளுமன்றம், நீதிமன்றம், போன்றவை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அதுபோலத் தான், சட்டமா அதிபர் திணைக்களமும் முக்கியமானது.
சட்டமா அதிபர் திணைக்களம், ஒரு அரசாங்கத்தின் சார்பான அமைப்பாக இருக்கக் கூடாது. அது ஒரு அரசின் நிறுவனம்.
அரசின் சார்பில் சட்டங்களை வகுப்பது, சட்டங்களை மீறுவோரைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பது, அதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வழிப்படுத்துவது, சட்டமா அதிபர் திணைக்களம் தான்.
நீதியை நிலைநாட்டுவதில், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முழுப் பொறுப்பும் இருக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும், அரசாங்கங்கள் மாறினாலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளும், பொறுப்பும், கடப்பாடும் மாறுவதில்லை. மாறவும் கூடாது. ஆனால், இலங்கையில் அத்தகைய நிலை இல்லை.
இலங்கையின் நீதியமைப்பு எப்போதுமே இனரீதியான பாதுபாட்டைக் கொண்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
தமிழர்களுக்கு சரியான நீதியை வழங்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் எப்போதும் இருந்ததில்லை.
தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தசாப்தக்கணக்காக விசாரணைகளின்றித் தடுத்து வைக்கத் துணை போனதும், சட்டமா அதிபர் திணைக்களம் தான்.
தமிழர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்ட போது, படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போது, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க காரணமானது, அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காதது சட்டமா அதிபர் திணைக்களம் தான்.
பல படுகொலை வழக்குகளில் தொடர்புடைய ஆயுதப்படையினரை தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்த சட்டமா அதிபர் திணைக்களம், பல மோசமான குற்றச்செயல்களுக்கு நீதியை வழங்குவதற்குக் கூட, நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
இவையெல்லாம் நாட்டின் நீதியமைப்பின் மீது தமிழர்கள் அவநம்பிக்கை கொள்வதற்கும், இன்று வரை நம்பிக்கை வைக்க முடியாமல் இருப்பதற்கும், முக்கியமான காரணமாக உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆட்சிக்காலத்தில் நீதித்துறையை சமநிலைப்படுத்தும் முயற்சிகள் ஓரளவுக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குப் போதுமானதாக இருந்தபோதும், தமிழ் மக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்குகின்ற அளவுக்கு போதுமானதாக மாற்றமடையவில்லை.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறுகிறது.
ஆனால், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் சட்டமா அதிபர் திணைக்களம், சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
இதிலிருந்தே அது பக்கசார்பற்ற நிலையில் செயற்படுவதாக சர்வதேசம் உணரவில்லை என்பது உறுதியாகிறது.
இந்த நிலைக்குக் காரணம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் போக்கு தான்.
அரசியல் ரீதியாக சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்த பல முடிவுகள், அதன் நேர்மையை குழிதோண்டிப் புதைத்து விட்டது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு வழக்குகளை போட்ட சட்டமா அதிபர் திணைக்களம், இந்த அரசின் காலத்தில் அந்த வழக்குகளை பலவீனப்படுத்தியிருக்கிறது. கைவிட்டிருக்கிறது.
இதனால் அரசாங்கத்துடன் தொடர்புடைய பலர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சட்டமா அதிபர் திணைக்களம் உரிய முறையில் செயற்படத் தவறியதால் தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள், தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களை பெற்றிருந்தும், அலட்சியமாக இருந்ததால் தான் வெடிப்புகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதனை அடிப்படையாக வைத்து 855 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய முடிந்த சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் அர்த்தம் என்ன?
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டை விலகிக் கொண்டது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு விழுந்த கரும்புள்ளிகளில் ஒன்று.
பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில், அரச படைகளுடன் தொடர்புடைய வழக்குகளில், இவ்வாறான போக்குத் தான் நிலவி வந்தது.
இப்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்குடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மை முற்றாகவே கேள்விக்குள்ளாகியுள்ளது.
அரசாங்கம் விரும்புகின்றவர்களை தண்டிப்பதற்கும், அரசாங்கத்துக்கு வேண்டியவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கும் தான், சட்டமா அதிபர் திணைக்களமாக இருந்தால், நீதியைக் காப்பாற்றும் பொறுப்பை அதனால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.
அதனை இன்று ஜெனிவா கூறுகின்ற நிலை வந்திருக்கிறது. அதற்குப் பொறுப்பு ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் அதிகாரிகளும் தான்.
“49ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பிக்கும் அறிக்கையில், போர்க்குற்ற விசாரணை சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை இருக்காது”
“ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் சட்டமா அதிபர் திணைக்களம், சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதிலிருந்தே அத்திணைக்களம் பக்கசார்பற்ற நிலையில் செயற்படுவதாக சர்வதேசம் உணரவில்லை என்பது உறுதியாகிறது”
-என்.கண்ணன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM