இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய 11 முக்கிய பரிந்துரைகள்

Published By: Digital Desk 3

26 Feb, 2022 | 01:44 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய 11 முக்கிய பரிந்துரைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் இலங்கை தொடர்பான 17 பக்க அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை நாளைய தினம் உயர்ஸ்தானிகர் பச்லெட்டினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதுடன் இதுகுறித்த விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தொடரை முன்னிறுத்தி இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் தயாரிக்கப்பட்ட 17 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஏற்கனவே இந்த அறிக்கை இலங்கையின் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததுடன் நிலையில், அதற்கான பதிலை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை அனுப்பியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் மனித உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், இராணுவமயமாக்கல் மற்றும் காணிப்பிரச்சினை, அதிகரித்துவரும் பெரும்பான்மைத்துவம் மற்றும் நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும், தடுப்புக்காவலின்கீழ் இடம்பெறும் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் ஏனைய முறையற்ற நடத்தைகள், பயங்கரவாதத்தடைச்சட்டப்பிரயோகம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முக்கிய வழக்குகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் பற்றிய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் முடிவுரையாகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடு தொடர்பில் உயர்ஸ்தானிகர் கரிசனை கொண்டிருக்கின்றார். 

கடந்த இரண்டு வருடங்களில் நீதிமன்றப்பொறிமுறை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்துவம் பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் மனித உரிமைகள்சார் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருக்கமடைந்துள்ளது. 

விமர்சனங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு சிவில் சமூக இடைவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி தற்போதைய பொருளாதார நெருக்கடி, ஏற்கனவே நிலவும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கும் அதேவேளை, இலங்கை கொண்டிருக்கக்கூடிய சர்வதேச மனித உரிமைகள்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சட்டம் மற்றும் பாதுகாப்புத்துறையிலும் ஏனைய கட்டமைப்புக்களிலும் மிகவும் ஆழமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தயாராக இருக்கின்றது. 

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டத்தையும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான பொறிமுறையையும் வகுக்கவேண்டும். ஆனால் உண்மை, நீதி மற்றும் மீள்நிகழாமை என்பவற்றை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளின்றி அதனை (நல்லிணக்கத்தை) அடைந்துகொள்ளமுடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய 11 பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்புத் தயாரிப்புப்பணிகள் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய அதிகாரப்பரவலாக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைவதுடன் அது  அனைத்துத்தரப்பினரதும் ஆலோசனைகளை உள்ளடக்கியதாகவும் அமைவதை உறுதிசெய்யவேண்டும். அதேபோன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்தி பலதரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்திலெடுக்கவேண்டும். 

சிவில் விவகாரங்களைக் கையாள்வதில் இராணுவத்தினரில் தங்கியிருப்பதை தவிர்ப்பதுடன் பொதுமக்களின் வாழ்வில் இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களுக்கு விரோதமான மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சுதந்திரமான முறையில் செயற்படுவதை உறுதிசெய்யவேண்டும். 

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் அவசியம் என்பதுடன் அச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் சுயாதீனமான முறையில் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும். 

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தவேண்டும். பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச சட்டக்கடப்பாடுகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன் அதுவரையில் அச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்தவேண்டும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்வதுடன் உரியவாறான ஆதாரங்களின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும். பயங்கரவாதத்தடைச்சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் விரிவான முறையில் திருத்தியமைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும். 

மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு அனைத்துவித பாதுகாப்புத்தரப்புக்களுக்கும் உத்தரவிடப்படவேண்டும் ஆகியவையே அப்பரிந்துரைகளாகும்.

அதேவேளை இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்புநாடுகளுக்கும் 3 பரிந்துரைகளை முன்வைத்திருக்கும் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட், ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புக்களுக்கென 4 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

இவ்வாறானதொரு இலங்கை தொடர்பான தனது அறிக்கையை உயரஸ்தானிகர் பச்லெட் நாளைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவிருப்பதுடன் இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38