ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பாக லண்டனில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பிரிட்டிஷ் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் ( British Metropolitan Police ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் லண்டன் மென்ரோபொலிடன் பொலிஸ் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற  படுகொலை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு லண்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிஸின் யுத்த குற்றப்பிரிவினர் கோரிவந்தனர்.

இதேவேளை, நோர்த்ஹாம்டன்சயரில் கடந்த செவ்வாய்கிழமை 48 வயதான குறித்த  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேகுற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் 51 ஆவது பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைதுசெயயப்பட்டதையடுத்து அவர் பின்னர் விசாரணையின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த கைதுஇடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் குடும்பத்தினருக்கு இச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.