(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் முறைமை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற தெரிவு குழுவிடம் முன்வைத்துள்ள யோசனைகளை செயற்படுத்த பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாகாண சபை தேர்தல் குறித்து பாராளுமன்ற மட்டத்தில் வினைத்திறனான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும்,அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று ராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களின் தேர்தல் சட்டம், தேர்தல் நிர்வாக சட்டம்,ஜனநாயக ரீதியில் சிறந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் அதிகாரிகள்,தேர்தல் பிணக்குகளை முகாமைத்துவம் செய்யும் பிரிவின் அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சி வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த பயிற்சி வழங்கல் அனைத்து மாகாணங்களையும் ஒருங்கிணைத்த வகையில் எதிர்வரும் மாத இறுதிக்குள் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதற்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

தேசிய தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தேர்தல் குறித்து எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை உணர்த்தியுள்ளது.தேர்தல் முறைமை தொடர்பில் இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற  தெரிவுகுழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனைகளை செயற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்,மக்கள் பிரதிநிதிகளை மீளழைத்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாரர்ளுமன்ற தெரிவுகுழுவிடம் முன்வைத்துள்ள யோசனை காலத்திற்கு பொருத்தமானதாக காணப்படுகிறது.

தேர்தல் முறைமை தொடர்பிலான தெரிவுகுழுவின் அறிக்கை வெகுவிரைவில் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும் அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து உரிய தீர்மானம் எடுக்கப்படும்.எத்தேர்தலையும் எதிர்க்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தேர்தல் இடம்பெறுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.தேர்தல் முறைமை  தொடர்பிலான தெரிவு குழுவிற்கு கட்சி என்ற ரீதியில் முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அல்லது மாகாண சபை தேர்தலை இவ்வருடகாலத்திற்குள் நடத்துமாறு தொடர்ந்து அரசாங்கத்திடமும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் வலியுறுத்தி வருகிறோம்.மாகாண சபை தேர்தலை நடத்த பாராளுமன்றமே வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும் சூழலையும்,ஜனநாயகமிக்க தேர்தலையும் ஐக்கிய தேசிய கட்சியே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.ஜனநாயகத்தை நிலைநாட்ட ஐக்கிய தேசிய கட்சி என்றும் ஒத்துழைப்பு வழங்கும்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிகழ்நிலை முறைமை ஊடாக இடம்பெறுவது சாதகமாக அமைந்தாலும் மறுதரப்பில் அது ஒருசில விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நிகழ்நிலைமை முறைமையினால் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.இவ்வாறான தன்மை தொடர்ந்தால் சர்வஜன வாக்குரிமைக்கு பாதிப்பு ஏற்படும்.ஆகவே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியதால ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்க்கொள்ள தயாராகவுள்ளது. தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுகுழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உள்ளுராட்சி அல்லது மாகாண சபை தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத்சாலி, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, ஸ்ரீ லங்கா சுந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திர கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவன்ன,ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.இராதாகிருஸ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேஷன் உட்பட அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.