செய்யும் செயலே வழிபாடு - சுனந்தாஜி வழங்கும் வருடாந்த பகவத்கீதை இணைய வழிமூலமான சொற்பொழிவு

24 Feb, 2022 | 04:00 PM
image

பகவத்கீதை வாழ்வின் வழிகாட்டி ஆகும். இது பண்டைய வேதாந்த தத்துவத்தை விளக்குகின்றது.

வேதாந்தம் சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, எல்லாருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் வாழ்க்கை பற்றிய கோட்பாடுகளை விளக்குகின்றது. 

இக்கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக கற்பதன் மூலம் கூர்மையான, தெளிவான புத்தியை விருத்தி செய்யலாம். 

இதன் மூலம் சமூகம், தொழில், குடும்பம் என எல்லா நிலையிலும் ஏற்படும் சவால்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியும். 

மேலும் வெளி உலகில், செய்யும் தொழிலில் வெற்றியையும் அகத்தில் அமைதியையும் ஒருங்கே அனுபவிக்க முடியும். 

எல்லாவற்றிக்கும் மேலாக வேதாந்தம் மனித வாழ்வின் உயர்ந்த இலட்சியமான மெஞ்ஞானத்தை அடைய வழிகாட்டுகிறது.

பகவத் கீதையின் நான்காவது அத்தியாயம், எமது நாளாந்த செயல்களை எவ்வாறு ஒரு யாகமாக, வழிபாடாக மாற்றுவது என்பதை விளக்குகின்றது. 

யாகம், வேத காலம் தொட்டு இன்று வரை பின்பற்றபட்டுவரும் ஒரு சமயச் சடங்காகும். 

யாகம் என்ற சொல்லின் பொருள் அக்னி வழிபாடு என்பதாகும். 

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் யாகம் என்பது நாம் எமது நாளாந்த வாழ்வில் சேவை, தியாக மனப்பான்மையுடன் உயர்ந்த இலட்சியத்திற்காக செய்யும் செயல்கள், என புதிய நடைமுறை இலக்கணம் வகுத்துள்ளார். 

இவ்வாறு நாளாந்த செயல்களை யாகமாக, வழிபாடாக மாற்றுவதன் மூலம் ஒருவர் செல்வச்செழிப்பையும், மனமகிழ்ச்சியையும், முழுமையையும் அடைய முடியும்.

சுனந்தாஜி உலக புகழ் பெற்ற வேதாந்த தத்துவ ஞானி சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையும் ஆவர். 

சுனந்தாஜி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வேதாந்தத்தை ஆழ்ந்து கற்று ஆராய்ந்து வருவதுடன் கற்பித்தும் வருகின்றார். 

தொன்மையான கீதையின் தத்துவத்தை நவீன யுக மக்களுக்கு எளிமையான முறையில் தெளிவு படுத்தும் அவரின் பேச்சாற்றல் இந்தியாவிலும் உலகலாவிய ரீதியிலும் போற்றப்படுகின்றது.

வருடாந்த பகவத் கீதை சொற்பொழிவானது, இவ்வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கை நேரம் மாலை 6.45 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியின் பிரதான அனுசரணையாளர்கள் கணபதி செட்டி செல்வநாதன் அறக்கட்டளை நிறுவனமாகும்.

மேலும் ‘வாழ்க்கை பற்றிய நோக்கு’ (insight into life) எனும் தலைப்பில் இளந்தலைமுறையினருக்கான கலந்துரையாடல் ஒன்றை உமையாள் வேணுகோபால், சுவாமி பார்த்தசாரதியின் சிஷ்யை மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதி வரை பிரதி சனிக்கிழமை தோறும் இலங்கை நேரம் மாலை 6.30 முதல் 7.30 வரை நடத்துவார்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் Zoom இணைய வழி மூலம் நடைபெறும். அனுமதி இலவசம். முன்பதிவு செய்தல் அவசியமாகும். 

Vedantacolombo.org எனும் இணையதளம் ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு : 0771730138/0710638837

முக்கிய செய்திகள்

icon-left
icon-right