(க.கமலநாதன்)

ஒரு காலத்தில்  10 இலட்சமாக இருந்த மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொகை இன்று 2 இலட்சம் வரையில் குறைவடைந்துள்ளது . பெருந்தோட்ட துறைக்கு வழங்கப்பட வேண்டிய வரப்பிரசாதங்கள் வழங்கப்பாடமையே இந்நிலைக்கு காரணம்.    எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் மரணப்பொறியாகவே அமைந்துள்ளது என்று  சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து விலயுறுத்தின.

தற்போது அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் போதாது என்பதால் தாம் பதவியை துறக்கப்போவதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் அவர்களை ஆட்சியில் அமர்த்திய மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அமைசர் மனோ கணேசன்,திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னண் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் குறித்த அமைப்புக்களின்  பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பு சன சமூக நிலையத்தில் நவ சமசமாஜ கட்சி,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான இயக்கம், சுகாதார சேவைகள் சங்கம், சோஷலிச ஐக்கிய முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.