(எம்.எப்.எம்.பஸீர்)

சிரேஷ்ட பெண் வணிக ஊடகவியலாளரும், சன்டே டைம்ஸ், ஏ.எப்.பீ. போன்ற ஊடகங்களின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகரவின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து அவரது தொலைபேசியை கொள்ளையடித்துவிட்டு அவரை படுகொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட பெயின்ட் பாஸ் என அறியப்படும் தொம்பே பகுதியைச் சேர்ந்த துருலான அன்டனீ சம்சன் ஜோர்ஜ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்  அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேகநபர் கைது - BBC News தமிழ்

குறித்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி  மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுவின் விசாரணையின் நிறைவில், குறித்த மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான தீர்ப்பை புதன்கிழமை ( 23) மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமார் ரத்னம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.  

கடந்த 2014 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த மெல் குனசேகர சமையலறையில் இருந்த கத்தியால் குத்தி கொலைச் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் மெல் குனசேகரவின் பிளக்பெரி ரக தொலைபேசியும் 1200 ரூபா பணமும் வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்டிருந்தது.

 இது தொடர்பில் விசாரணை செய்த மிரிஹான பொலிஸார் சி.சி.ரி.வி., காணொளிகளை மையப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ததுடன் அந்த பிளக்பெரி தொலைபேசியையும் கொள்ளையிடப்பட்ட பணத்தில் 720 ரூபா மிகுதியையும் மீட்டனர்.

 இந் நிலையில் மெல் குணசேகரவின் வீட்டுக்கு வர்ணம் பூச வந்தவரே இந்த கொலையை செய்துள்ளமையும் திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்த போது மெல் குனசேகர அங்கு இருந்ததை அவதனைத்து இந்த கொலையை அவர் செய்திருந்தமையும் விசாரணைகளில் உறுதியானது.

 இந் நிலையிலேயே  குறித்த சந்தேக நபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு மேல் நீதிமனறில் வழக்கு தொடரப்பட்டது.

 மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தககல் செய்யப்பட்டிருந்தது. வீட்டுக்குள் இரகசியமாக அத்துமீறியமை, தொலைபேசியை திருடியமை மற்றும் கொலைச் செய்தமை ஆகிய குற்றச் சாட்டுக்களே இவ்வாறு சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டன.

அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில் இந்த வழக்கு கடந்த 2016 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்பெற்றது.  

இவ்விசாரணைகளில்  சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  ஷனில் குலரத்ன ஆஜரானதுடன், பிரதிவாதிகாக சட்டத்தரணி  சவ்மியா ஹெட்டி ஆரச்சி ஆஜராகியிருந்தார்.

நீண்ட விசாரணைகள் நிறைவுற்ற நிலையில்  பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நீரூபிக்கப்பட்டதாக கூறி கடந்த 2017 ஜூலை 5 ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்பட்டது.

 வீட்டுக்குள் இரகசியமாக அத்து மீறியமை தொடர்பில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி தொலைபேசியை திருடியமை தொடர்பில் 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்தார். அத்தனை அடுத்து கொலை தொடர்பில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி தீர்மானிக்கும் திகதியில், வெலிக்கடை சிறைச்சாலையின்  நான்கு சுவர்களுக்குள் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இதன் போது நீதிபதி தீர்ப்பறிவித்திருந்தார்.

 இந் நிலையிலேயே அந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளி மேன் முறையீடு செய்திருந்தார்.   தன்னை குற்றவாளியாக அறிவிக்க முன்னர் தன் பக்க நியாயங்களை  மேல் நீதிமன்றம் சரியாக ஆராயவில்லை எனவும், சாட்சிகள் பரஸ்பரமானவை எனவும்  மேன் முறையீட்டில் குற்றவாளி குறிப்பிட்டிருந்தார்.

 இந் நிலையிலேயே மேன் முறையீட்டு மனுவை விசாரித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றின் மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.