இளம் சமூகத்தை கவர்ந்த பிரபல சிங்கள பாடகரான சிலீ எனப்படும் திலங்க விதுஷ தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 6 ஆம் திகதி பெலவத்த, விஜித்த புற பகுதியில் வைத்து 56 வயதுடைய பஸ் வண்டி சேவகர் ஒருவரை தாக்கியமை தொடர்பிலேயே அவரை கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 6ம் திகதி சிலீ எனும் இந்த பாடகர் 56 வயதுடைய குறித்த நபர் மீது கை கால்களால் தாக்கியதையடுத்து அவர் தொடர்ந்து தலங்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சிலீயை கைது செய்ய கடந்த 6ம் திகதி முதல் பொலிஸார் தேடி வந்தனர். எனினும் அவர் தனது இருப்பிடத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார், கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர். இதன்போது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.