மாஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

இதன்போது மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாஹோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5.35 மணியளவில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் இதில் வைத்தியரான 49 வயதினை உடைய  வவுனியா, உக்குலாங்குளம், சிவன் கோயில் வீதியைச் சேர்ந்த வைத்தியரான கௌரி மனோகரி நந்தகுமாரும், வவுனியா, பண்டாரிக்குளம், 5 ஆவது ஒழுங்கை பகுதியைச் சேர்ந்த 18 வயதான சத்தியநாதன் சிவதுர்கா எனும் யுவதியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதெனிய - அனுராதபுரம் பிரதான வீதியின் மாஹோ பொலிஸ் பிரிவின் உதாகம பகுதியில் கெண்டனர் வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் அனுராதபுரம் திசையிலிருந்து பாதெனிய பகுதியை நோக்கி பெண் வைத்தியர் உள்ளிட்டோர் பயணித்த கெப் வண்டி பயணித்துள்ளது. 

இதன்போது, பாதையின் இடதுபக்கமாக கெண்டனர் வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் வேகமாக பயணித்துள்ள குறித்த கெப் வண்டி கெண்டனர் வண்டியின் பின் பகுதியில் மோதியுள்ளது. இதன்போது கெப் வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்தோர் அம்மூவரையும் உடனடியாக மஹோ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது பெண் வைத்தியரும் அவருடன் இருந்த 18 வயதான யுவதியும் உயிரிழந்துள்ளநிலையில் சாரதி தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். மஹோ வைத்தியசாலையில் இருந்து சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீது மஹோ வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் கெண்டனர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாஹோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.