(எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.  கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு இன்று (22) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் : விசாரணைகளில் புதிய தகவல்கள் பல அம்பலம் |  Virakesari.lk

 இன்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 இராணுவ புலனாய்வாளர்களுக்கும் மன்றில் ஆஜராகியிருந்தனர். அதன்படி  இவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன்  மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னாள்  விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதிவாதிகள் 9 பேரும் மன்றில் ஆஜரான நிலையில் அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுர மெத்தேகொட மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஆஜராகினர். வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில்  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி  வசந்த பெரேரா ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். பதிக்கப்பட்ட தரப்புக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

 இதன்போது மன்றுக்கு விடயங்களை சுட்டிக்காட்டிய   பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா,   இன்றைய தினம் (22) சாட்சி  நெறிப்படுத்தலை முன்னெடுக்க சட்ட மா அதிபர் தரப்பு ஆயத்தம் இல்லை எனவும் அதனால் வேறு ஒரு திகதியை தருமாறு கோரினார்.

 அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  மன்றில் ஆஜராகிய சாட்சியாளருக்கு அடுத்த தவணையின் போது  கண்டிப்பாக ஆஜராகுமாறு  எச்சரித்து வழக்கை ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.