உள்ளூர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு துறைகளில் உள்ள பாரிய தொழில் முயற்சியாளர்களுடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டுத் தொழில்முனைவோர் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி, உலகளாவிய தொற்றுப் பரவல் நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், பலர் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுத்து வரும் தவறான எண்ணங்களை, வர்த்தகச் சமூகத்தினரால் மாத்திரமே சரிசெய்ய முடியுமென்றும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதனால் சீமெந்துக்குப் பற்றாக்குறை நிலவியதெனத் தெரிவித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லை என்று எடுத்துரைத்த அமைச்சர், மருந்துப்பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்று வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென்று, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கெப்ரால் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்கள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன என்றும் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்த அரசாங்கத்தால் முடியுமென்றும் கடனல்லாத வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொவிட் தொற்றொழிப்பு வேலைத்திட்டத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த தொழில்முனைவோர், அந்த வெற்றி காரணமாகத்தான் தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது என்றனர்.
பல்வேறு நாடுகள் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அந்நாடுகள் பலவற்றுக்குக் கிடைக்கவிருந்த பல வாய்ப்புகள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில், சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணக் கிடைக்கின்றது. அதன் அபிவிருத்திக்காக, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் தொழில்முனைவோர் எடுத்துரைத்தனர்.
உயர்க்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை முற்றாக நிறுத்தி, நாட்டுக்குள்ளேயே அந்தக் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு, ஜனாதிபதியிடம் தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழில்முனைவோர் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM