பெண்களை பாலியல் ரீதியில்  பற்றுவது மற்றும் முத்தமிடுவது  தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  பில் கிளின்டன் ஆகியோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை  வாரி இறைத்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பில் மறுப்புத் தெரிவித்துள்ள  அவர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  ஹிலாரி கிளின்டனுடன் பங்கேற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு  பில் கிளின்டன் மீது பாலியல் ரீதியான  அவதூறுகளை வாரி இறைத்துள்ளார்.

அரசியல் வரலாற்றில்  பெண்கள் தொடர் பில்  பில் கிளின்டன்  அளவிற்கு துஷ்பிரயோகங்களை  மேற்கொண்டவர்கள்  வேறு எவரும் இருக்க முடியாது என  அவர் கூறினார்.

இந்நிலையில் தனது கணவர் தொடர்பில் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட ஹிலாரி மறுத்துள் ளார்.

டொனால்ட் டிரம்ப் பெண்களை பற்றுவது மற்றும் முத்தமிடுவது குறித்து தற்பெருமை பேசும் 2005 ஆம் ஆண்டு கால காணொளிக் காட்சி தொடர்பில் அந்த விவாத நிகழ்ச்சியின் நடுவரான அன்டர்ஸன் கூப்பர் வினவியதையடுத்தே  டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதன் போது ஹிலாரி கிளின்டன்,  வெளியாகியுள்ள குறிப்பிட்ட காணொளிக் காட்சியானது டொனால்ட் டிரம்ப் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை காண்பிப்பதாக உள்ளதாகக் கூறினார்.

சென்.லூயிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற  இந்த விவாத நிகழ்ச்சியானது டொனால்ட் டிரம்பும் ஹிலாரியும் இணைந்து பங்கேற்கும் 3 ஜனாதிபதி தேர்தல் பிரசார விவாத நிகழ்ச்சிகளில் இரண்டாவது விவாத நிகழ்ச்சியாகும்.

இதன்போது டொனால்ட் டிரம்ப், தான் ஜனாதிபதியாக தெரிவானால் ஹிலாரி கிளின்டன் அரசாங்க விவகாரங்களை தனது தனிப்பட்ட இலத்திரனியல் அஞ்சல் மூலம் பரிமாறிக் கொண்டமை   தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட விசாரணையாளரை  நியமிக்கவுள்ளதாகவும்  அத னால் அவர் சிறை செல்ல நேரிடும் எனவும்  சூளுரைத்தார்.

அத்துடன் ஹிலாரியின் ஆதரவாளர்களை  வருந்தத்தக்கவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஹிலாரி பதிலளிக்கையில்,  தன்னுடைய விவாதம்  டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பற்றியது அல்ல எனவும் அது அவரது வெறுப்பூட்டும் பிரிவினைவாத பிரசாரம்  பற்றியதாகும் என்று கூறினார்.

மேற்படி விவாத நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு  ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்  டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டன் பாலியல் ரீதியில் தம்மை தவறாக நடத்தியதாக குற்றஞ்சாட்டிய 4 பெண்களுடன்  பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டார்.

முன்னாள் அர்கன்ஸாஸ் மாநில பணியாளரான போலா ஜோன்ஸ்,  அர்கன்ஸாஸ் மாநில மருத்துவ பராமரிப்பு நிலையமொன்றின் நிர்வாகியான ஜுவானிதா புரோட்றிக், வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளரான கத்லீன் வில்லே மற்றும்   கதே ஷெல்டன் ஆகியோரே மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அந்த 4  பெண்களுமாவர்.

போலா ஜோன்ஸால்  தாக்கல் செய்யப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கின் நிமித் தம் பில் கிளின்டன் 1999  ஆம் ஆண்டு அவருக்கு 850,000  அமெரிக்க டொலரை  செலுத்தியிருந்தார். அவர்  குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் அந்தப் பணத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜுனைதா, 1978 ஆம் ஆண்டு ஹோட்டல் அறையொன்றில் வைத்து  பில் கிளின்டன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

அதேசமயம் கத்லீன் வில்லே,  1993  ஆம் ஆண்டு பில் கிளின்டன் தன்னை பாலியல் ரீதியல் தவறான முறையில் பற்­றியிருந்ததாக  குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இதற்கு முன்னர் அப்படியொரு சம்பவமே இடம்பெறவில்லை என வாதிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற நான்காவது பெண் ணான கதே ஷெல்டன், தான் 12  வயதில் பில் கிளின்டனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பில் கிளின்டனுக்கு ஆதரவாக ஹிலாரி நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும் குற்றஞ் சாட்டினார்.