(என்.வீ.ஏ.)
இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தின் கடைசி 2 லீக் போட்டிகளில் சப்ரகமுவ மாகாணமும் வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களின் கூட்டு அணியான ரஜரட்ட அணியும் வெற்றிபெற்றன.
இரத்தினபுரி சீவலி மைதானத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊவா மாகாணத்துடனான போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சப்ரகமுவ மாகாணம் வெற்றிபெற்றது.
இப் போட்டியில் 8 ஆவது நிமிடத்தில் ஊவா மாகாண பின்களத்தில் ஏற்பட்ட தவறை பயன்படுத்திக்கொண்ட சப்ரகமுவ மாகாண வீரர் எம். முஷ்பிக் முதலாவது கோலைப் போட்டார். எவ்வாறாயினும் அதன் பின்னர் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டவாறு கோல்களைப் போட முயற்சித்து வந்தன.
ஆனால், அடுத்த 79 நிமிடங்களில் மேலதிக கோல் போடப்படவில்லை.
போட்டியின் 87 ஆவது நிமிடத்தில் முன்னோக்கி வந்த ஊவா கோல் காப்பாளரை வலதுபுறமாக கடந்து சென்ற சப்ரகமுவ மாகாண அணித் தலைவர் எம். ஷிபான் இலகுவான கோல் ஒன்றைப் போட அவரது அணி 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.
9 நிமிடங்கள் கழித்து உபாதையீடு நேரத்தில் ஊவா மாகாண வீரர் சத்துர பொன்னபெரும, பந்தை தனது நெஞ்சினால் கட்டுப்படுத்தி இடதுகாலால் 'ஹாவ் வொலி' முறையில் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
எனினும் சற்று நேரத்தில் போட்டி முடிவுக்கு வர சப்ரகமுவ மாகாணம் 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ரஜரட்ட 3 - 1 என வெற்றி
கேகாலை நகர சபை மைதானத்தில் நடைபெற்ற மற்றைய கடைசி லீக் போட்டியில் மத்திய மாகாணத்தை எதிர்த்தாடிய ரஜரட்ட அணி 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் வேகத்துடனும் விவேகத்துடனும் விளையாடியபோதிலும் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளையின் பின்னர் போட்டி தொடர்ந்தபோது 62ஆவது நிமிடத்தில் மத்திய மாகாண அணித் தலைவர் காலித் அஸாமித் இடது காலால் கோர்ணர் கிக் மூலம் மிகவும் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய மாகாணம் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது.
எனினும் 13 நிமிட இடைவெளியில் ரஜரட்ட அணி 3 கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.
போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை, என். மொஹமத் மிகவும் சாமர்த்தியமாக மத்திய மாகாண கோல்காப்பாளருக்கு மெலாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
6 நிமிடங்கள் கழித்து வலது புறத்திலிருந்து தாழ்வாக பரிமாறப்பட்ட பந்தை டி. திரிமான்ன எவ்வித சிரமும் இன்றி வெறுமனே இருந்த கோலினுள் இடது காலால் தட்டிவிட, ரஜரட்ட அணி 2 - 1 என முன்னிலை அடைந்தது.
மேலும் 7 நிமிடங்கள் கழித்து மத்தய களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பந்தை மிகவும் வேகமாக நகர்த்திச் சென்ற என். மொஹமத், எதிரணி கோல்காப்பாளரை கடந்து சென்று இலகுவான கோல் ஒன்றைப் போட்டார்.
அணிகள் நிலை
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, ரஜரட்ட ஆகிய அணிகள் பங்குபற்றிய இப் போட்டியின் லீக் போட்டிகள் யாவும் சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தன.
இதற்கு அமைய சப்ரகமுவ, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்கள் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளுக்கு முன்னேறின. நான்காவது அணியாக தென் மாகாண அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.
லீக் போட்டிகள் யாவும் முடிவடைந்ததைத் தொடர்ந்து சொந்த மண், அந்நிய மண் என்ற அடிப்படையில் அரை இறுதிப் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன.
அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற சப்ரகமுவ மாகாணத்துக்கும் நான்காம் இடத்தைப் பெற்ற தென் மாகாண அணிக்கும் இடையிலான முதலாம் கட்ட முதலாவது அரை இறுதிப் போட்டி காலியில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த அணிகள் சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டி இரத்தினபுரியில் மார்ச் 1 அல்லது 2ஆம் திகதி நடைபெறும்.
வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான முதலாம் கட்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இந்த இரண்டு அணிகளும் இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டியில் அம்பாறையில் மார்ச் 1 அல்லது 2ஆம் திகதி விளையாடும்.
இந்த இரண்டு கட்ட அரை இறுதிப் போட்டிகளிலும் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். ஒட்டுமொத்த கோல்கள் சமநிலையில் இருந்தால் வெற்றி அணி அல்லது அணிகள் பெனல்டி முறையில் தீர்மானிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM