இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர், ஆறாவது விரலாக மாறியிருக்கும் ஸ்மார்ட் போனுடன் செலவழிக்கும் நேரம் அதிகம். இணைய வழியாக கல்வி பயில்கிறார்களேத் தவிர கலையை பயில்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை.மாறிவரும் வேகமான வாழ்க்கை நடைமுறையில் கல்வி கற்பதே கடினமாகியிருக்கும் தருணத்தில் கலைகளைக் கற்பதற்கு விரும்புவதேயில்லை.
இந்நிலையில் பரதநாட்டியம், வீணை, வாய்ப்பாட்டு, ஓவியம், காலிகிராப், மெக்ராமி போன்ற நுண்கலைகளைக் கற்று, ஏனைய இளங்கலைஞர்களுக்கு முன்மாதிரியான கலைஞராகத் திகழ்பவரும், ‘மிருத்யகலா நர்த்தகி’ என்ற பட்டத்தையும் வென்றிருப்பவருமான பரதநாட்டிய கலைஞர் செல்வி. ஆதிரா பிரகாஷ் அவர்களை சங்கமத்திற்காகச் சந்தித்தோம்.
உங்களைப் பற்றி..?
எம்முடைய தாத்தா எம் ஜி வல்லபன். திரைப்பட பாடலாசிரியர் மற்றும் ஊடகவியலாளராக பணியாற்றியவர். கலைகள் மீது அளவற்ற ஈடுபாடுக் கொண்டவர். எம்முடைய பெற்றோர்கள் அர்ச்சனா மற்றும் பிரகாஷ் எம்முடைய கலையார்வத்தைத் தெரிந்து கொண்டு, கலைகளைக் கற்க தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இருந்தனர். தற்போது நான் பரதநாட்டிய கலைஞராக கலைசேவையாற்றுவதற்கும் அவர்கள் தான் முழுமுதற் காரணம். அண்மையில் உலகப்புகழ்ப்பெற்ற பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜ் அவர்களின் முன்னிலையில் எம்முடைய அரங்கேற்றம் நடைப்பெற்றது.
பரதத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
நடனத்தின் மீதான எம்முடைய ஆர்வத்தை நான்கு வயதிலேயே பெற்றோர்கள் இனங்கண்டனர். அதனைத்தொடர்ந்து பாடசாலையில் நடைபெற்றும் கலைவிழாக்களில் நடைபெறும் நாட்டிய போட்டிகளில் பங்குபற்றி பரிசினை வென்றேன். இதனையடுத்து எம்முடைய வீட்டிற்கு அருகே நடனம் கற்பிக்கும் ஆசிரியரான திரு என் செந்தில்குமார் அவர்களிடம் பரதநாட்டியத்தைக் கற்கத் தொடங்கினேன். தொடர்ந்து பரதநாட்டியக்கலையைக்கற்று வருகிறேன்.
குருவிடமிருந்து கற்றுக் கொண்டது என்ன?
‘Live at the moment’, என்பது என் குருவின் முக்கியமான மேற்கோள். நல்ல நடனக் கலைஞர் தனக்கே உரிய பாணியை உருவாக்க வேண்டும், மற்ற நடனக் கலைஞர்களைப் பின்பற்றக் கூடாது என்பார். அதனால் தான் வழுவூரார் பாணியில் நடனத்தைக் கற்றுக்கொண்டிருந்தாலும், குருவின் வழிகாட்டலுடன் பரதநாட்டியத்திலுள்ள வேற பாணி ( Style) யான கலாஷேத்ரா பாணியையும் கற்றுக்கொள்ளவிருக்கிறேன்.
பரதநாட்டிய கலைஞருக்கு அரங்கேற்றம் ஏன் அவசியமாகிறது..?
அரங்கேற்றம் என்பது பல வருட பயிற்சிக்குப் பிறகு தனது நடன திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வாகும். எந்த கலை வடிவமும் பொதுவெளியில் வெளிப்படுத்தப்பட வேண்டும், அதனால் ஒவ்வொரு நடனக் கலைஞருக்கும் அரங்கேற்றம் முக்கியமானது.
அடவுக்கு பாவனை வேண்டுமா? வேண்டாமா?
பாவனை என்பது பரதநாட்டியத்தின் இன்றியமையாத அங்கமான மன நிலையின் வெளிப்பாடு. அடவுக்கு உள் வெளிப்பாடான பாவனையும் தேவை என்பதே எம்முடைய எண்ணம்.
மறக்க இயலாத அனுபவம் குறித்து..?
எம்முடைய அரங்கேற்ற நிகழ்வின் போது, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நாட்டிய சங்கீத கலா பாரதி சுவாமிமலை கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றி தங்கள் வாழ்த்துக்களையும், ஆசியையும் வழங்கியதை மறக்க இயலாது.
அரங்கேற்றத்திற்கு முன்னரே நாட்டிய நாடகங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மேடையில் நடனமாடி இருப்பீர்கள். அது தொடர்பாக தங்களின் அனுபவம் குறித்து...
எம்முடைய குரு வடிவமைத்து மேடையேற்றிய கிருஷ்ணர் பற்றிய நாட்டிய நாடகத்தில் யசோதாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் எம்மை முழுமையாக ஈடுபடுத்தி, பயிற்சி பெற்று, நாட்டியமாடிய போது நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாக பாராட்டுகள் கிடைத்தது.
உங்களைப் போன்று வளரும் இளம் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் விடயம் என்ன..?
எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்வதற்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை. எம்மைப் போன்ற இளங்கலைஞர்கள் புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டிருக்கும் வேறு நாட்டிய கூறுகளுடனான பரதநாட்டியத்தை மேடையில் ஆடுவதை விட, பாரம்பரியமிக்க நடனத்தை மேடையில் அதற்கேயுரிய நுணுக்கத்துடன் வெளிப்படுத்துவது தான் சிறந்தது
பரத நாட்டிய கலையை மேலும் வளர்த்தெடுக்க நீங்கள் முன்மொழிய விரும்பும் ஆலோசனை என்ன..?
பாடசாலையில் கற்பிக்கும் கற்கை நெறியில் கலை ஒரு பாடமாக சேர்க்கப்பட வேண்டும். கலை வடிவத்தை ஊக்குவிக்க பாரம்பரிய நாட்டியக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் மற்றும் கற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகள் வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.
சந்திப்பு கும்பகோணத்தான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM