இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று

By Vishnu

17 Feb, 2022 | 12:51 PM
image

பெப்ரவரி 17 ஆம் திகதியான இன்று  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாகும். 

இலங்கை கிரிக்கெட்டின் பொன்னான வாய்ப்பாக கருதப்படும் முதல் டெஸ்ட் போட்டி, சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு இன்று 1982 பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. 

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த சிறப்பான ஆட்டம் சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பந்துல வர்ணபுர இலங்கை அணியை வழிநடத்தியதுடன், கீத் பிளெட்சர் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களை எடுத்தது. ரஞ்சன் மதுகலே மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரை சதம் அடித்தனர். 

அசந்த டி மெல் தலைமையிலான இலங்கை பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

ஐந்து ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், கடைசி 7 விக்கெட்டுகளும் 8 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தன. 

முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறிய ஜோன் எம்பரி, இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது, இலங்கை சார்பில் அதிகபயடிாக ரோய் டயஸ் 77 ஓட்டங்களை எடுத்தார். 

171 என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

போட்டியின் நடுவர்களாக ஹெர்பி ஃபெல்சிங்கர் மற்றும் கே.டி. பிரான்சிஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

முதல் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தாலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முழு அங்கத்துவம் பெறுவதற்கு தாங்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை இலங்கை வீரர்கள் இந்த ஆட்டத்தில் நிரூபித்தனர்.

இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை, இதுவரை 299 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 

இந் நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் மொஹாலியில் எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி தொடங்கவுள்ளது, இது இலங்கையின் 300 ஆவது டெஸ்ட் போட்டியாகும். 

இலங்கை இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 95 இல் வெற்றி பெற்றுள்ளதுடன் 113 இல் தோல்வியடைந்துள்ளது. 91 போட்டிகள் சமநிலையின்றி முடிவடைந்துள்ளன.

குமார் சங்கக்கார 134 போட்டிகளில் 57.40 இன்னிங்ஸ் சராசரியுடன் 12,400 ஓட்டங்களுடன் இலங்கை அணிக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவராகவுள்ளார்.

முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மற்றும் 133 போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right