வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (16.02.2022 ) ஆறு வருடங்கள் கடந்துவிட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

அண்மையில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வித்தியாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் எனது மகளின் பாலியல் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்த ஹரிஸ்ணவியின் தந்தை கங்காதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா உக்கிளாங்குளத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது 16 வயது பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி கடந்த 2016.02.16 அன்று பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் இடம்பெற்று நேற்றுடன் ஆறு வருடங்கள் கடந்து போய்விட்டன.

பிள்ளைகள் என்பது இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு 2002 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு வரத்தை 2016 ஆம் ஆண்டு இழந்துவிட்டோம்.

இனிமேல் எனது மகள் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்றுவரையில் எங்களின் மகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இப்படுகொலையைப் புரிந்த நபர் இன்றுவரையில் சமூகத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார். குறித்த நபர் சமூகத்திற்கு சட்டத்தினூடாக அடையாளம் காட்டப்படவேண்டும். 

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையைப் புரிந்தவர்கள் எவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டதோ அவ்வாறு அத்தீர்ப்பை அன்று வழங்கிய நீதிபதி இழஞ்செழியன் ஐயா எனது மகளின் படுகொலையில் தொடர்புபட்டவர்களுக்கு நீதியைக் பெற்றுத்தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு தற்போது கிடைத்துவிட்டது. 

ஒவ்வொரு வழக்குத் தவணையின் போதும் எமக்கு நீதி கிடைக்கும் என்று எண்ணுவதுண்டு ஆனால் கடந்த ஆறு வருடங்களாக நீதிதுறையில் எமக்கு இருந்த நம்பிக்கை இழந்துபோய்விட்டது என்று மேலும் தெரிவித்துள்ளார்.