சமூக நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும் ஒரு நாட்டிற்குள் வாழும் சமூக மக்களிடையேயும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக பேசப்பட்டு வரும் எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும்.
பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகள் முரண்பாடுகளை களைந்து தமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதே நல்லிணக்கத்திற்கானத் தேவை உணரப்படுகின்றது.
எமது இலங்கையை பொருத்தவரையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த கசப்பான யுத்த அனுபவங்கள் இன்று சமூக நல்லிணக்கத்தை வேண்டி அதற்காக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினூடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை நாம் மறுத்துவிட முடியாது.
இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து நாட்டினுடைய சுயாதீன தன்மையினை பாதுகாப்பதற்காக எம் முன்னோர்கள் வெளிநாட்டவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து எமது நாட்டிற்கான சுதந்திரத்தை பெற்றெடுத்தனர்.
சுதந்திர இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர். எனினும் பிற்காலத்தில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மை சகவாழ்வின்மை, புரிந்துணர்வின்மை காரணமாக இனங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் மற்றும் பிணக்குகளினால் நாட்டின் அனைத்து சமூகங்களும், மக்களுக்கும் பாரிய பாதிப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது மூன்று தசாப்தங்களாக எதிர்நோக்கிய யுத்தம் ஆகும் இவ் ஆயுதப்போராட்டம் 2009 ஆண்டின் இறுதியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சமூகங்களுகிடையே நிலவிய நம்பிகைகளிலும் உறவிலும் பாரிய விரிசல்களை ஏற்படுத்தி பிழையான புரிதல்களையும் எச்சங்களாக விட்டு சென்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுற்ற பின்னரே சமூக நல்லிணக்கம் பற்றிய சிந்தனை உதயமாகியது என்பதை எவரும் மறந்து விடமுடியாது.
நிலையான அபிவிருத்தியை அடைய வேண்டுமாயின் பல்லினத் தன்மையை பேணக்கூடிய பொறுப்புணர்வு மிக்க ஒற்றுமையான சமுதாயத்தினை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப வேண்டியது எமது தார்மீக பொறுப்பாக அமைந்துள்ளது.
நிலையான அபிவிருத்தி இலக்குகளில், பௌதீக, பொருளாதார அபிவிருத்தி, சூழல் மற்றும் கலாச்சாரங்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் சமூகத்தில் சமாதானமான சூழல், சமூக நீதி, வினைத்திறனான சமூக செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
எனவே தான் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் சமாதானமான மற்றும் உள்ளடக்கமான (peaceful and inclusive) சமூகங்களை ஊக்குவித்தல்¸ அனைவருக்கும் நீதியினை அணுகும் வசதியினை வழங்கல்¸ அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை கொண்ட உள்ளடக்கமான நிறுவனங்களை கட்டியெழுப்பல் (strong institutions) என்பன உள்ளடங்கியுள்ளன.
இன்றைய சூழலில் பன்மைத்துவம், மதங்களுக்கு இடையிலான பல்லினத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகின்றது. எனினும் வெறுமனே பேசுவதை விடுத்து குறித்த பன்மைத்தன்மையை அங்கீகரிப்பதற்கான மனப்பான்மையை இனங்களுக்கு இடையே ஏற்படுத்த தேவையான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படுவதே மிக முக்கியமாகும்.
பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்றதொரு நாட்டில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதென்பது சிரமமானதொரு காரியமாகும். ஆனால் ஒவ்வொரு தரப்பும் மற்றத் தரப்பினரின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் செயற்பட முடிந்தால் அந்தச் சிரமமான பணி சாதகமாகிக் கைகூட முடியும்.
நம்பிக்கையும், விட்டுக்கொடுப்பும் தாராளமனப்பாங்கும் இந்த முயற்சியை வெற்றிகொள்ளச் செய்யும். இதற்கு மனமாற்றம் இன்றியமையாத தொன்றாகும்.ஒவ்வொரு சமூகத்தினதும் அடிப்படை உரிமைகளை பேணுவதற்கும் வாய்ப்பளிப்பதற்கும் நல்லிணக்கம் ஒன்றே சரியான பாதையாகும். பொதுவான அடிபபடை உரிமைகள், தேவைப்பாடுகள் முறிவடைகின்றபோதே நல்லிணக்கம் இல்லாது போகின்றது.
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற வேறுபாடின்றியும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற முரண்பாட்டின்றியும் சகலரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்டால் மட்டுமே இந்தப் பயணத்தில் சரியான திசையை நோக்கிப் பயணிக்க முடியும். நாட்டின் வளமான எதிர்காலம் இந்த ஒற்றுமையிலேயே தங்கியிருக்கின்றது. கடந்தகால கசப்புணர்வுகள் எமது உள்ளங்களிலிருந்து பிய்த்தெறியப்படவேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் பட்சத்திலேயே இந்த முயற்சி சாத்தியப்பட முடியும். நல்லிணக்கம், சமாதானம், ஒருமைப்பாடு என்பன வார்த்தைகளால் மட்டும் அடையக்கூடியவைல்ல. எமது செயற்பாடுகளிலேயே அது தங்கியுள்ளன
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான கொள்கைகள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் நீடித்துநிலைத்த சமாதானம் ஆகியவற்றை இந்த நாட்டில் நிலைநிறுத்தும் பொருட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கைகளை வகுத்தல், மற்றும் மோதல்கள் மீண்டும் தலைதூக்காதவாறு அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய ஒருமைப்பாடினைஉருவாக்குதல் ஆகிய நோக்கங்களை முதன்மையாக கொண்டு 2015.09.2ஆந் திகதி அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தாபிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மூலமும் , சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு,புணர்வாழ்வளிப்பு, மீள்குடியமர்த்தல் மற்றும் இந்து சமய அலுவல்கள் குறித்த விடையங்கள் குறித்த கொள்கைகள் நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான 2015 .09.12 ஆம் திகதிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாபிக்ப்பட்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியமர்த்தல் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு போன்ற நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான கொள்கைகளை செயற்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்தும், இலங்கையின் தனித்துவத்தை பேணி பாதுகாக்கும் கொள்கை , சட்டம், கல்வி, மற்றும் பயன்பாடுகளினனூடாக பல்வகைமை மற்றும் கலாச்சார பன்மைத்துவம் என்பவற்றுக்கு அங்கீகாரமளித்தும் மொழி மரபுரிமைகள் தொடர்பாக ஒவ்வொறு நபருக்குமுள்ள உரிமைகளுக்கு மதிப்பளித்தும் கலந்துரையாடல் ,தீர்ப்பளித்தல் ஓரங்கட்டல் மற்றும் மோதல் என்பன மீண்டும் தலைதூக்காதவாறு அவற்றை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளின் ஊடாக அனைத்து இலங்கையர்களிடையேயும் ஒற்றுமை பற்றி வலுவானதோர் புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக “இலங்கையர் அது எமது தனித்துவம் , பல்வகைமை அது எமது வலிமை” எனும் அமைச்சரவை வாசகத்திற்கினங்க தேசியம் தொடர்பான எண்ணக்கருவை தோற்றுவித்து தேசிய ஒருமைப்பாற்றிற்கு உணர்பூர்வமாண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.நாளைய எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியின் எதிர்பார்ப்புகள் வீண் போய்விடக் கூடாது.
- நூறுல் ஜின்னா முஹம்மட் அஸாம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM