(ஆர்.யசி)
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிறன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக நீதியை பெற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான காரியாலயத்தில் மகஜர் ஒன்றை கையளிக்கவும் தீர்மானித்துள்ளனர்.
யுத்தத்திற்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வரையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மாபெரும் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்வதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆகப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் நடராஜன் கேசரிக்கு கூறுகையில்,
எமது உறவுகளை தேடித்தேடி எமது தாய்மார் களைத்துப்போய்விட்டனர். இனியும் தேட வேண்டுமா என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எமது போராட்டம் ஒன்றே இன்றைய எமது தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க உயிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்த பின்னரே அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு அரச தரப்பினர் பல பொய்யான தகவல்களை கூறுகின்றனர். இவற்றையெல்லாம் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20ஆம் திகதியுடன் கிளிநொச்சியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.
எனவே இதனை சர்வதேசத்திற்கு உரக்கச்சொல்லும் விதமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20ஆம் திகதியன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரதும் ஆதரவு கிடைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். எமது போராட்டம் வெறுமனே எமது பிள்ளைகளை தேடும் போராட்டம் மட்டும் அல்ல, இன்று எமது தமிழ் இனத்தை திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
எமது உரிமைகள் பல்வேறு வழிகளில் பறிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. இதனை எல்லாம் கண்டுகொள்ளாது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்துகொண்டுள்ளனர். நேற்று எமது பிள்ளைகள் காணாமல் போனதைப்போன்று நாளை ஏனைய தாய்மாரின் பிள்ளைகளும் காணாமல் போய்விடக்கூடாது.
எனவே தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்த விடயங்கள் கையில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்களின் காதுகளில் கேட்கும் விதமாகவும், சர்வதேச தலையீடு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அதேபோல் அன்றைய தினமே கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தில் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM