“ புதுவருட காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்படும் ”

By T Yuwaraj

16 Feb, 2022 | 07:02 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 1500 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை விடுவிப்பதாக நிதி அமைச்சரின் மூலமாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் செயற்பாட்டில் அது சாத்தியப்படவில்லை எனவும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். 

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய  1800 கொள்கலன்கள் | Virakesari.lk

இதே நிலைமை தொடருமானால் புதுவருட காலத்தில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமையில் அத்தியாவசிய பொருட்களை  தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நிதி நெருக்கடி நிலைமையை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடியாது. ஏதேனும் ஒரு வழியில் இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே பொதுவான நிலைப்பாடாக உள்ளது.

குறிப்பாக நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய சிக்கல் நிலையொன்று இப்போதும் காணப்படுகின்றது. இன்றும் கொழும்பு துறைமுகத்தில் 1500 கொள்கலன்கள் விடுவிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான டொலர் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் தெரிவித்த போதிலும் அது வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது.

இன்றுவரை அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கொள்கலன்களில் அரிசி, பருப்பு, சீன போன்ற அத்தியாவசிய பொருட்களே அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

டொலர் பெற்றுக்கொடுக்க முடியாத இன்றைய நிலைமையில், நாளாந்தம் 50 கொள்கலன்களை மட்டுமே விடுவிக்க முடியுமாக உள்ளது.

இந்த நிலைமை தொடருமானால் எதிர்வரும் புதுவருட காலத்தில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படும். அதற்கு இடமளிக்காத விதத்தில் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right