(ஆர்.யசி)

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கக்கோரி பொதுமக்களின் கையொப்பம் சேர்க்கும் ஆவணத்தில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையொப்பமிட்டுள்ளார். அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டமும் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டதுடன், ஆவணத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கவாதிகளும் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்ககோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப்போராட்டம் முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்  நேற்று கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்டது. 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று காலை 11 மணிக்கு இந்த நடவடிக்கையை  முன்னெடுத்திருந்த நிலையில் அதற்கு முன்னதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து குறித்த ஆவணத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Image

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கக்கோரிய பொதுமக்கள் கையொப்பம் பெரும் ஆவணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று காலை கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் வைத்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம்  கையளித்துள்ளதுடன், அதில் பேராயரின் கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் செயற்பாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் தாக்கத்தை செலுத்தும்.

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடாகும். அதனை நீக்க முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எமது ஆதரவையும் வழங்கத்தயார் எனக் கூறியுள்ள பேராயர், ஜனநாயக நாட்டில் பேச்சுச் சுதந்திரம், தனது கருத்தை தெரிவிக்கும் உரிமை போன்றவை மனித உரிமைகளாகும். அந்த உரிமைகளை காப்பாற்றிக் கொள்வதற்கு நாம் எமது நீதித்துறையின் உதவியை கேட்டு நிற்கின்றோம். 

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து  நான் மிகவும் கவலை அடைகிறேன். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் சுதந்திரமாக இருக்கின்றனர். 

ஆயினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதி வேண்டி போராடுபவர்களை மெளனிகளாக்கி தடைசெய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது நாமும் கண்டிக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டம் நேற்று காலை  11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த கையெழுத்து போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வசந்த சமரசிங்க, மற்றும் குறித்த சகல கட்சிகளின் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் சகலரும் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.

அதேபோல் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்து கோப்பில் தமது கையெழுத்துகளை இட்டு பயங்கரவாத தடை சட்டத்திற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.