(ஆர்.யசி)

அரசாங்கத்தின் பலவீனங்களை மூடி மறைக்க பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி எதிரணியின் குரல்களை அடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முற்றுமுழுதாக கைவிட வேண்டும். 

பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்காதுபோனால் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து சிவில் அமைப்புகளை இணைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம் என எதிர்க்கட்சிகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டம் நேற்று காலை  11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த கையெழுத்து போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த வேலைத்திட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,

பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடு முழுவதிலும் உள்ள மக்களின் மூலமாக தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பெப்ரவரி 3 ஆம் திகதி இதனை முல்லைத்தீவில் ஆரம்பித்தோம். அதன் பின்னர் பல்வேறு நகரங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பிலும் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கேயும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன மத மற்றும் அரசியல் கட்சி பேதம் எதுவும் இல்லாது இந்த கோரிக்கையை விடுக்கின்றோம். 

1979 ஆம் ஆண்டு ஆறுமாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட சட்டமே இதுவாகும். எனினும் இப்போது 42 ஆண்டுகளுக்கு மேலாக பலருக்கு அநீதியை இழைத்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக மிக மோசமாக பயன்படுத்தப்பட்டதை போன்று, சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும்,  முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதையும் தாண்டி இப்போது அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை யார் முன்வைத்தாலும் அவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் கையாளப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

ஆகவே அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சட்டத்தை நீக்குவோம் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளனர். அதனை நிறைவேற்ற வேண்டும். அதை செய்யாது கண்துடைப்பு நாடகமாக பயங்கரவாத திருத்த சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர். 

ஆனால் அந்த திருத்த சட்டமூலத்தில் எந்த திருத்தமும் கிடையாது. ஆகவே அதனை கைவிட்டு பயங்கரவாத தடை சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாக இந்த வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் இதன்போது கருத்து தெரிவிக்கையில் கூறியதானது,

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தும் இந்த வேலைத்திட்டமானது வெறுமனே வடக்கு கிழக்கிற்கு மட்டுப்பட்ட ஒன்றல்ல. அதேபோல் தமிழ் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றும் அல்ல. இது ஒட்டுமொத்த இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களையும் பாத்திக்கும் விடயமாகும். நாட்டில் இன்று வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி பயங்கரவாத செயற்பாடுகள் எதுவம் இல்லை. இன்று இந்த நாட்டில் அரச பயங்கரவாதமே காணப்படுகின்றது. 

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்றால் ஒரே நாளில் இந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முடியும். அதில் எந்த சிக்கலும் இல்லை. நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்தும் சட்டமூலத்தை கூட காலையில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பகல் முழுவதும் விவாதித்து பிற்பகல் நிறைவேற்றி சென்றனர். 

இந்த விடயத்திலும் கூட அவசியமான நேரத்தில் உடனடியாக சட்டத்தை இயற்றிக்கொள்ள முடியும். ஆகவே இப்போது பயங்கரவாத சட்டத்தை நீக்கி, சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாது இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது, ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் முடியாது.

நாம் அனைவருமே இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். அதன் பின்னர் இன, மத அடையாளங்களை வெளிப்படுத்துகின்றோம். ஆகவே இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு இனக்குழுக்களை இலக்கு வைத்து இடம்பெறும் அடக்குமுறைகளை முதலில் நிறுத்தியாக வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். 

ஒரே நாட்டில் ஒரே சட்டம் இருக்கும் என்றால் இனக்குழுக்களை பிரிக்க வேண்டாம். நாம் பிரிவினைவாதிகள் அல்ல, எம்மை பிரித்து வைக்க நினைக்கும் நபர்களே உண்மையான பிரிவினைவாதிகளாவர். இதனை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஜனாதிபதியிடம் நாம் கூறுவதும் ஒன்றுதான், நீங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் எப்போதாவது சில நல்ல விடயங்களையேனும் செய்யுங்கள்.

விரைவில் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக பாரிய சிக்கல் நிலைமைகள் உருவாகும். எனவே தயவுசெய்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது எமக்கு பயங்கரவாத தடை சட்டம் தேவையில்லை. இந்த சட்டம் இல்லாது ஆட்சியை கொண்டு நடத்த முடியும். அவ்வாறு செய்து காட்டுங்கள். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியும். 

தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொண்டு அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் வந்த வாகுக்கேட்டாலும் பரவாயில்லை. அதற்கு முதல் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க நாடு முழுவதும் செல்வோம், அதில் நாமும் கைகோர்த்து போராடுவோம். இந்த சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் என உரக்கக் கூறுவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையராக ஒன்றிணைந்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க குரல் எழுப்புவோம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்ட போது ஒரு தற்காலிக சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று 42 ஆண்டுகளாக தற்காலிகமா இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு யுத்தத்திற்கு பின்னரும், அரசாங்கம் தொடர்ச்சியாக ஜனநாயகத்திற்கு எதிராக எதிர்தரப்பை தண்டிக்கும் விதமாக பொய்யான குற்றங்களை சுமத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து மனித உரிமை மீறல் வழக்குகள் பல உள்ளன. 

சர்வதேச மட்டத்திலும் பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ள நிலையிலும், எமது நாட்டிற்கு எதிரான தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இருந்து விடுபட இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்த பின்னரும் கூட கண்மூடித்தனமாக இந்த சட்டத்தை பயன்படுத்தி எதிர் தரப்பை தண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல சகலரையும் ஏமாற்றும் விதமாக பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளனர். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

பயங்கரவாத தடை சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான விதத்தில் பயங்கரவாதத்ததை தடுக்கும் வேறு சட்டத்தை கொண்டுவர முடியும். சர்வதேச நாடுகளில் இப்போதும் காணப்படும், சட்டத்தின் இறையாண்மை, சட்டத்தை பலப்படுத்தும் விதமாக சட்டமொன்றை கொண்டுவர முடியும். ஆனால் இப்போது வரவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை சமாளிக்க மீண்டும் ஒருமுறை பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கவே அரசாங்கம் தயாராகிக்கொண்டுள்ளது. 

வெளிவிவகாரத்துறை அமைச்சரின் பொய்யான வாக்குறுதிகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே உடனடியாக இந்த சட்டத்தை நீக்க வேண்டும், இல்லையேல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமல்ல நாட்டில் உள்ள சிவில் அமைப்புகள் சகலதையும் இணைத்துக்கொண்டு எதிரணியை தண்டிக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை வைத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராகவும் வீதிக்கு இரங்கி போராட நேரிடும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க கூறுகையில், நாட்டில் சகல மக்களும் அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு சட்டங்கள் இயற்றப்பட வேண்டயுமே தவிர மக்களை அடக்குமுறைக்கு உள்ளாகவோ கட்டுப்படுத்தவோ சட்டங்களை இயற்றக்கூடாது. அரசாங்கம் தமது குறைபாடுகளையும் தவறுகளையும் மூடி மறைக்க மக்களை அடக்குமறைக்குள் உற்படுத்தவே அரசாங்கம் சட்டங்களை இயற்றிக்கொண்டுள்ளது. 

நாட்டின் ஜனநாயகத்தை நாசமாக்கும், மக்களை அடக்குமுறைக்குள் உற்படுத்தும், சட்டத்தை மிதிக்கும் சட்டங்களை முழுமையாக நீக்கி ஆரோக்கியமான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் அதற்கு தயாரில்லை என்றால் சகலர தரப்பும் ஒன்றிணைந்து நியாயத்திற்காக போராடுவோம். 

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பலை உருவாகிக்கொண்டுள்ளதை அரசாங்கம் நன்றாக உணர்ந்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்காகவே பயங்கரவாத தடை சட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும் என்றார்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறுகையில்,

இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றது. 1980களின் பின்னர் இருந்தே இந்த சட்டத்தினால் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது குறித்து கலந்துரையாட ஏற்ற சூழல் இருக்கவில்லை. 

சட்டத்தில் பல தவறுகள் இருந்தும் கூட யுத்தம் என்ற ஒரு காரணியை வைத்துக்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் யுத்தத்திற்கு பின்னர் குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இந்த சட்டத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாது போனது. 

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அடுத்த சில ஆண்டுகளுக்கு பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க எவராலும் குரல் எழுப்ப முடியாது போய்விட்டது. ஈஸ்டர் தாக்குதலை வைத்து இந்த அரசாங்கம் நாட்டின் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க முடியாது என்ற பிரசாரத்தை செய்தனர்.தற்போது சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது பயங்கரவாத தடை சட்டம் பாயும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலமாக மீண்டும் இந்த நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலைமை ஏற்படும். ஆகவே தான் வடக்கில் இருந்து எமது இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்து இன்று கொழும்பிலும் பின்னர் நாட்டில் சகல பகுதிகளிலும் எமது இந்த செயற்பாட்டை முன்னெடுத்து செல்லவுள்ளோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் சகலரும் இந்த சட்டத்தினால் அடக்கப்படும் நிலைமை தலை தூக்குகின்றது. ஆகவே தான் நாம் முன்வந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக சிவில் அமைப்புகள் மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் பலவும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதுவே எமக்கும் வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.