(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில்  விஷேட மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில், சட்ட மா அதிபரை பிரதிவதியாக குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த உத்தேச திருத்தச் சட்ட மூலமானது,  அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதால், அதனை நிறைவேற்றுவதாக இருப்பின் பாராளுமன்றின்  மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு  மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உத்தரவிடுமாறு மனு தாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

“பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்ட மூலம் ” என்ற தலைப்பில் உத்தேச சட்ட மூலமானது கடந்த  2022 பெப்ரவரி 10ஆம் திகதி பாராலுமன்றத்தில் சமர்ப்பிக்கப்ப்ட்டது.  

இந்த சட்ட மூலமானது தற்போதும் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின்   அடிப்படை பிரச்சனைகளுக்கு இந்த  உத்தேச சட்ட மூலம் தீர்வு வழங்கவில்லை எனவும், குறித்த சட்ட மூலம் ம் ஊடாக திருத்த விரும்பும் வரையறுக்கப்பட்ட பகுதிகள் கூட திருப்திகரமக இல்லை என  மனுதாரர் உயர் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொடூரமான சட்டம்  கடந்தகாலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு கடந்த காலங்களில், சித்திரவதை, நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் பல அடிப்படை உரிமை மீற சம்பவங்களை பதிவு செய்துள்ள நிலையில்,  அச்சட்டம் தவறாக பயன்படுத்தபப்டுவதிலிருந்து மீள்வதற்கான 

வழிகள் கூட உத்தேச திருத்த சட்டத்தில் இல்லை என தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மனுவில் சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.

"பயங்கரவாத தடை சட்டம்  1979 இல் நிறைவேற்றப்பட்டது,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அமுலில் இருக்கும் வண்னம் அவசர சட்ட மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருந்தது.  அச்சட்டம் அரசியலமைப்புக்கு  உட்பட்டதா என்பதை ஆராய சில மணி நேரங்கள் மட்டுமே சந்தர்ப்பம் இருந்தது.   மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அச்சட்ட திருத்தப்பட்டது. அதுவும்   ஒரு அவசர சட்டமூலமாகவே அது திருத்தப்பட்டது. அது முதல்  இந்தச் சட்டம் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக இலங்கையின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியது" என மனுதாரர்கள்  தெரிவித்துள்ளனர்.

உத்தேச சட்டமூலத்தின்  2, 3, 4, 6, 10, 11 மற்றும் 12 ஆம் அத்தியாயங்கள் ஊடாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள்  அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அத்தகைய உட்பிரிவுகள் நீக்கப்பட்டாலே  தவிர,  அதனை சட்டமாக இயற்ற முடியாது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

அதனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தச் சட்டத்தை அப்படியே  நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியலமைப்பின் 83 (அ)  உறுப்புரை பிரகாரம்  பாராளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக  சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உத்தரவிடுமாறு மனு ஊடாக உயர் நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.