ஹெயரி டங்க் எனப்படும் கருமையான நாக்கு பாதிப்பை களையும் லேசர் சிகிச்சை

By T Yuwaraj

13 Feb, 2022 | 12:52 PM
image

இன்றைய திகதியில் எம்மில் சிலருக்கு இயல்பான வண்ணத்தில் இருக்க வேண்டிய நாக்கின் மேல் பகுதி வண்ணம் மாறி, கருமையான வண்ணத்திலும், அங்கு முடி வளர்வது போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது. இது ஹெயரி டங்க் எனப்படும் ஒரு வகையான பாதிப்பு என்றும், இதனை களைய தற்போது லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலக அளவில் உள்ள மக்கள் தொகையில் 13% மக்களுக்கு கருநாக்கு என எளிய மக்களால் குறிப்பிடப்படும் ஹெயரி டங்க் (Hairy Tongue) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. சுத்த படுத்தப்படாத வாய் சுகாதாரத்தாலும், ஒரு வகையான பாக்டீரியா தொற்றுக்களானாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக எம்முடைய நாக்கு பகுதியில் சுவை மொட்டுகளுடன்  சுவையற்ற ஃபிலிஃபார்ம் பாப்பிலா எனப்படும் மொட்டுக்களும் நாவின் மையப்பகுதியில் உள்ளன.

 இவை பொதுவாக ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான உயரத்தில் அமைந்திருக்கும். இவை 1.5 மில்லி மீற்றர் அளவிற்கு மேல் வளர்ச்சி அடைந்தாலோ... அவை கருமையான வண்ணத்தில் முடி போன்ற தோற்றத்தில் நாக்கின் மேல் பகுதியில் ஏற்பட்டாலோ.. இதனை ஹெயரி டங்க் என மருத்துவத் துறையினர் குறிப்பிடுவார்கள்.

ஃபிலிஃபார்ம் பாப்பிலா இயல்பான அளவைவிட கூடுதலாக வளர்ச்சி அடைந்ததால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நாவின் இயல்பான வண்ணம் மறைந்துவிடும். ஆண் பெண் என பாலின பேதம் இன்றி எந்த வயதிலும் ஏற்படும் இத்தகைய பாதிப்பு தற்காலிகமானவை தான் என்றாலும், இதன் தோற்றம் அசௌகரியத்தை ஏற்படுத்துபவை.

குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள், வாய் சுகாதாரத்தை முறையாக நாளாந்தம் பின்பற்றாதவர்கள், பாக்டீரியா தொற்று, மௌத் வாஷ் எனப்படும் பிரத்தியேக  திரவ ரீதியிலான மருந்தினை எடுத்துப் கொள்வதாலும், ரேடியேஷன் தெரபி என்ற சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்கும், நாளாந்தம் அதிகளவு கோப்பி அல்லது தேநீர் பருகுபவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு.

இத்தகைய பாதிப்பு ஏற்படும் பொழுது ஃபிலிஃபார்ம் பாப்பிலா இயல்பான அளவைவிட 10 முதல் 15 மடங்கு கூடுதலாக வளர்ச்சி அடைந்திருக்கும். இதன்போது அதன்மீது குரோமோஜெனிக் பாக்டீரியா எனப்படும் பாக்டீரியா  தொற்றுகளும் உண்டாகும். இந்த பாக்டீரியா தொற்றுக்கள் பரவியிருக்கும் நாவின் பகுதி முழுவதும் அதன் இயல்பான வண்ணமான பிங்க் வண்ணத்திலிருந்து கருமையான வண்ணத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளில் சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். வேறு சிலருக்கு உணவு உண்ணும் போது அவ்விடத்தில் எரிச்சல் ஏற்படக்கூடும். சிலருக்கு நாவின் வண்ணம் மாற்றம் பெற்றிருப்பதால் மனதளவில் மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பற்களை நாளாந்தம் தேய்த்து சுத்தப்படுத்தும் போது, நாவினை சுத்தப்படுத்தும் பிரத்தியேக கருவிகளையும் பயன்படுத்தி நான்கினையும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். பெரும்பாலும் இத்தகைய மாற்றங்கள் இரண்டு வார காலத்திலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தானாக சரியாக கூடும். சிலருக்கு எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை அளித்தால், இதற்காக தற்போது பிரத்யேக லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

இத்தகைய பாதிப்பு இருப்பவர்கள் புகை பிடிப்பவராக இருந்தால், புகை பிடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். வாய் சுகாதாரத்தை பேண வேண்டும்.

டொக்டர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right