பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது - அருட்தந்தை மா.சத்திவேல்

Published By: Digital Desk 3

12 Feb, 2022 | 12:56 PM
image

பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (12.02) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கோ அதனால் மீறப்படும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்த ஆட்சியாளர்களும் ஆயத்தமில்லை என்பதையே பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தமென முன் வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சனையை சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் தலைவர்கள் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தவறியது மட்டுமல்ல அரசியல் போராட்ட எழுச்சியை அடக்குவதற்கு பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டதோடு அச்சட்டம் நான்கு தசாப்தங்கள் கடந்தும் இன்றும் பாதுகாக்கப் படுகின்றது. 

ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த போதும் அரசியல் தீர்வு 13+ என்பதை நீக்கி தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என்பதே இன்றைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. இதற்கு மத்தியிலேயே பயங்கரவாத தடை சட்டம் திருத்தமென போலி முன் பொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு அடித்தட்டு பௌத்த சிங்கள மக்கள் பேரினவாத போதை யூட்டி வளர்க்கப்பட்டனர். இச்சட்டத்தை பாவித்து 1983ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள தலைவர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். 

மேலும் 1988 /89 ஆம் காலப்பகுதியில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

இச்சட்டத்தின் மனிதாபிமானமற்ற மனித உரிமைகள் மீறும் சரத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்பதை அறிந்தும் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு மக்களை திரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது வேறு வகையில் எதிர்ப்பு காட்டவோ மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வரவில்லை. 

காரணம் சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலுமிருந்தும் இராணுவத் தரப்பிடமிருந்தும் தமது கட்சியினருக்கு எதிர்ப்பு கிளம்பி விடும் எனும் குறுகிய அரசியல் நோக்கமும் தமிழர்களின் தனி நாட்டு அரசியலை முற்று முழுதாக அழிக்கவேண்டும் எனும் உள் நோக்கமுமாகும்.

இக்கொடிய சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்காது இருந்தனர் என்றே கூறலாம். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்க ளுக்கு எதிராகவும் அதே சட்டம் பாய்ந்து தற்போது 300க்கும் அதிகமானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் பலர் விசாரணை என தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போதும் இச்சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிலர் குரல் கொடுத்தாலும் பெரும் பான்மையானோர் அமைதி காக்கின்றனர். காரணம் தங்களையும் பயங்கர வாதிகளாக்கிவிடுவர் எனும் பயமாகும்.

தற்போது இச்சட்டம் இருந்தாலே தமிழ் ,முஸ்லீம் அரசியல் எழுச்சியை, பிரிவினைவாதத்தை, பயங்கரவாதத்தை, அரச எதிர்ப்பு நடவடிக்கை களை அடக்க முடியும் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்த முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதலால் மனித உரிமை மீறும் அடிப்படைத் தன்மைகள் திருத்தம் செய்யப்படவில்லை. இத்திருத்தத்தினை ஏற்றுக் கொள்வோரும் உண்டு.

இச்சட்டத்தை பாதுகாப்பாக கொண்டே ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதோடு இன அழிப்பினை பல்வேறு வகைகளில் தொடர்கின்றனர்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இக்கொடிய சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கூறினாலும் உள்நாட்டு மனித உரிமை ஆணைக்குழு இச்சட்டம் அகற்றப் படுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இவர்களும் ஆட்சியாளர்களின் கருவியாக செயல்படுவதே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் வடக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மக்களின் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே கட்சியை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது. அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான மறைமுக உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துவிடக்கூடாது.

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பாவிக்கப்படும் பயங்கரவாத சட்டம் இனிவரும் காலங்களில் முதலாளித்துவத்திற்கு எதிராக, இயற்கை வள கொள்ளையர்களுக்கு எதிராக, வெளியக சக்திகளுக்கு எதிராக செயற்படுவோர்க்கு எதிராக பாவிக்கப்பட்ட உள்ளது என்பதே உண்மை. இது இருப்பதையே பல சக்திகள் விரும்புகின்றன. அதற்காகவே சட்டத்திருத்தம் என போலியான முன்மொழிவு நாடகமாடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் சக்தியை வடகிழக்கிலும், வட கிழக்கிற்கு வெளியிலும் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குறுகிய கட்சி அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் மக்கள் வாழ்வை காக்க மக்கள் சக்தியை கட்டியெழுப்பி அதன் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க செயற்படவேண்டும். அதற்கான முனைப்பு காட்ட வேண்டும் இதுவே காலத்தின் தேவையாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59