(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச தரப்பை திருத்திப்படுத்த பயங்கரவாத திருத்த சட்டத்தில் மாற்றங்களை செய்யவில்லை. எமது இறையாண்மையை கேள்விக்கு உற்படுத்தும் விதமாக சர்வதேச தரப்பு கூறும் விதத்திற்கு இலங்கையின் நீதி கட்டமைப்பை இயக்க நாம் தயாராகவும் இல்லை என  நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார், 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தாமதமடைந்தாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்: நீதி ...

அத்தோடு சட்டத்தை பலப்படுத்தவும், தனிநபர் சுதந்திரத்தை பலப்படுத்தவும், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எம்மால் செய்ய முடிந்த சகலதையும் நாம் செய்து முடிப்போம் எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10),  இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயகம் பலமடைய வேண்டும் என்றால் அதனுடன் தொடர்புடைய  நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று தூண்களையும் பலப்படுத்த வேண்டும்.

இதில் நீதிமன்றம் குறித்து நாம் கூறிய கதைகள் முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் மக்களுக்காகவே உள்ளது, 

இதுவே எமது இலக்காகும். எதிர்கட்சியினர் நீதிமன்ற சுயாதீனம் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டு ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் நீதிமன்றத்தையே நாடுகின்றனர்.

எனவே கட்சி பேதமின்றி நீதிமன்ற சுயாதீனத்தை பலப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் எமது இறையாண்மையை கேள்விக்கு உற்படுத்தும் விதமாக சர்வதேச தரப்பு கூறும் விதத்திற்கு இலங்கையின் நீதிமன்றத்தை இயக்க நாம் தயாராக இல்லை.

கடந்த 42 ஆண்டுகளாக காணப்படும் பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள பல விடயங்களில் இப்போது திருத்தங்களை முன்னெடுத்துள்ளோம்.

இன்று இதனை விமர்சிக்கும் நபர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்றோம். எனினும் இப்போது நாம் மாற்றங்களை செய்துள்ளோம். 

இதில் ஆலோசனை குழுவொன்றை நியமித்து பாதிக்கப்பட்ட தரப்பின் வாக்குமூலங்களை பெற்று வருகின்றோம். இப்போது எமக்கு பல மாற்றங்களை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலமாக பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொண்டுக்க முடிந்துள்ளது.

இது சர்வதேச தரப்பினருக்கு தேவையான விடயமென கருதி இதனை முன்னெடுக்கவில்லை. சட்டத்தை பலப்படுத்தவும், தனிநபர் சுதந்திரத்தை பலப்படுத்தவும், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எம்மால் செய்ய முடிந்த சகலதையும் நாம் செய்து முடிப்போம்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் காலம் குறைக்கப்பட்டுள்ளது, பிணை வழங்கும் வாய்ப்புகள் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு காரணிகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்பினர் தொடர்ச்சியாக இதனை விமர்சித்து வருகின்றனர். நாம் சர்வதேச தரப்பை திருத்திப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.மாறாக எமது கடமையை இப்போது செய்துகொண்டுள்ளோம். 

எந்தவொரு நபரும் குற்றமிழைக்காது தண்டிக்கப்படக்கூடாது. ஆகவே தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அதே போல் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.