(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி 18-20 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் எந்த திருத்தமும் பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற நீதி அமைச்சின் கீழான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை, ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதனை புதிய திருத்தத்தில் 12 மாதங்களாக குறைத்துள்ளனர். இது தவிர முக்கியமான மாற்றங்கள் அதில் கிடையாது. பகுதி 7 கீழ் கைதானவர்கள் டிரையல் முடியும் வரை சிறையில் வைக்க முடியும். எந்த நீதிமன்றத்தினாலும் பிணை வழங்க முடியாது என்ற பிரிவும் அவ்வாறே இருக்கின்றது.

அத்துடன் பல தமிழ் இளைஞர்கள் 18, 20 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கீழ் கைதான இவர்கள் இன்று  வயோதிபர்களாக உள்ளனர். வழக்கு தொடரப்படாமலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர். 

ஆயுதமேந்தி போராடிய  12 ஆயிரம் பேர் மன்னித்து விடுவிக்கப்பட்டார்கள் . சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்ந்ததற்காக  பல தமிழ் இளைஞர்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு   எந்த நிவாரணமும் இந்த திருத்தத்தில் வழங்கப்படவில்லை.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் யார் செய்தார்கள் என்று இன்னும் வெளிவரவில்லை. இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். 

சஹ்ரான் எனும் நயவஞ்சகனின் செயலால் முழு முஸ்லிம்  சமூகமும் பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது.  இந்த குண்டுத் தாக்குதலை காரணங்காட்டி 20 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை பல மாதங்கள் தடுத்து வைத்தார்கள். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க காரணம் தேவையில்லை. பல மாதங்கள் அல்லது வருடங்கள் சிறையில் வைக்கும் முறை தொடர்கிறது. இது வேதனை அளிக்கிறது. 

அத்துடன் ஒரு நாடு ஒருசட்டம் தேவையாயின் அதுதொடர்பான செயலணிக்கு நல்லதொரு தலைவரை  நியமியுங்கள். நாமும் அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.