(நா.தனுஜா)

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்வதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இச்செயன்முறையைப் பொறுத்தமட்டில் 'அதிகாரப்பரவலாக்கம்' என்பது இன்றியமையாத காரணி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 8 ஆம் திகதி வரை தலைநகர் புதுடில்லியில் தங்கியிருந்ததுடன் உயர்மட்டப்பிரதிநிதிகள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். 

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவரது பதவிக்காலத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை 7 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதன்போது  இந்திய - இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதேவேளை இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் 'அயல்நாட்டிற்கு முதலிடம்' கொள்கை மற்றும் பிராந்தியநாடுகள் அனைத்திற்குமான பாதுகாப்பு, வளர்ச்சி நோக்கு ஆகியவற்றின்கீழ் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். 

அத்தோடு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆகாய மற்றும்  கடல்மார்க்கத் தொடர்புகளை விரிவுபடுத்தல், பொருளாதார மற்றும் முதலீட்டுச் செயற்திட்டங்கள், இலங்கையின் சக்திவலுப்பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எமது கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பைப்பேணல், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் நன்மையளிக்கக்கூடியவாறான செயற்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். 

அதுமாத்திரமன்றி இலங்கைக்குத் தேவையேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா உடன்நிற்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.  

அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் இந்திய ஆதரவின் நேர்மறையான தாக்கங்களை நினைவுகூர்ந்த எஸ்.ஜெய்சங்கர், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்வதன் ஊடாக இலங்கை அதன் நலன்களை அடைந்துகொள்ளமுடியும் என்று வலியுறுத்தியதுடன்  இச்செயன்முறையில் 'அதிகாரப்பரவலாக்கம்' இன்றியமையாத கூறு என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நீண்டகாலமாகத்தொடரும் இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாணப்படவேண்டும். 

இவ்விடயத்தைக் கையாள்வதில் வன்முறை பிரயோகிக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். 

அதனைத்தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.