அஹ்னாப், ஹிஜாஸின் விடுதலைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

Published By: Vishnu

10 Feb, 2022 | 01:13 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஏனைய சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வரவேற்றுள்ளன.

அதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து தொடர்ந்தும் கரிசனையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

 உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்குமான வாய்ப்பை வழங்குகின்ற பயங்கரவாதத்தடைச்சட்டமானது சித்திரவதைகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள்சார் அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றன. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு அமைவாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

 அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கடந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாமல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது. அத்தோடு அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கவிஞரான அஹ்னாப் ஜசீம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நேற்று முன்தினம் புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி மார்ட்டின் கெலி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

'சுமார் 22 மாதகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை வரவேற்கின்றோம். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் எவ்வித தடைகளுமின்றி நியாயமான முறையில் நீதியை அணுகுவதற்கானதோர் சமிக்ஞையாக இது அமையும் என்று நம்புகின்றோம்' என்று பதிவிட்டுள்ளார்.

 அதேவேளை இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் இதுகுறித்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஏனைய சிலர் அண்மைய மாதங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக அப்பதிவில் தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், 'வழக்கு விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் உள்ளடங்கலாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து பிரித்தானியா தொடர்ந்து கரிசனையை வெளிப்படுத்துவதுடன் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான அவர்களது உரிமையை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தும்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

 மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்று ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 'இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவின் தலைவர் மேரி அரேனா வரவேற்றுள்ளார். அதேவேளை நாட்டின் மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், அதன் மையத்தில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

 நிலைபேறான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு உள்வாங்கப்படவேண்டும். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் அம்பிகா சற்குணநாதனால் வழங்கப்பட்ட சாட்சியங்களுக்காக அவரைத் தாக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை சரியான நடவடிக்கையல்ல' என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01