39 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை ; மேன்முறையீடு செய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் - தயாசிறி

Published By: Digital Desk 3

10 Feb, 2022 | 12:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளக ரீதியில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கூட இன்று ஏற்றுக்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இல்லையென்றால், மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விசாரணை அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, அதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என சபையில் தெரிவித்த  இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இந்த நாட்டை காப்பாற்றிய 39 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள சர்வதேச தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நீதி சுயாதீனம் பற்றி நாம் பேசினாலும், பல ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது காலம் கடத்தும் நிலைமையொன்று காணப்படுகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு வழக்குகளை விரைவாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஜெனிவா விவகாரங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. பெப்ரவரி இறுதியில் இருந்து ஏப்ரல் முதலாம் வாரம் வரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. எமது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இந்த நாட்டை காப்பாற்றிய 39 இராணுவ அதிகாரிகளுக்கு உலகில் பல்வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவின் வீசாவை அமெரிக்கா நிராகரித்தது. 2020 ஆம் ஆண்டில் சவேந்திர சில்வாவின் வீசா மறுக்கப்பட்டது. 2021 இல் மேஜர் ஜெனரல் உதய பெரேராவிற்கும் இதுவே இடம்பெற்றது. 

எனினும் இந்த 39 பேருக்கும் தமது விசா நிராகரிப்பிற்கான மேன் முறையீடு  செய்வதற்கான உரிமையினை ஏன் நாம் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த 39 பேரில் போர் குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் இருப்பார்கள் என்றால் அதனை கண்டறிய முடியும் என்றால் அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பது வேறு விடயம். 

இவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதா என்பதை ஆராய பல்வேறு ஆணைக்குழுக்கள் இலங்கையில் நிறுவப்பட்டன. அவர்களின் அறிக்கைகளை மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளும் நிலையொன்று காணப்படவில்லை.

இப்போத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் தாம் குற்றம் செய்யவில்லை என்பதை நிருபிக்க முடியும் என்றால், அதற்கான மேன் முறையீடுகளை செய்து உறுதிப்படுத்த எவரும் மறுப்புத்தெரிவிக்கப்போவதில்லை. அதேபோல் மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விசாரணை அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டியது அவசியமானதாக மாறியுள்ளது. 

உகண்டா, ருவண்ட மற்றும் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் யுத்த குற்ற நீதிமன்றங்களில்  ஆயுத மோதல் ஒன்று இடம்பெறும் வேளையில் பிரதானமாக மனித உரிமை சட்டமல்ல சர்வதேச மனிதாபிமான சட்டம் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையொன்று காணப்படுகின்ற போதிலும்   இலங்கை விடயத்தில் தலையிட ஏன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இடம் கொடுக்கின்றோம். ஆகவே இந்த விடயங்களில் நாம் தலையிட வேண்டும். 

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இல்லாத ஒரு அதிகாரத்தை பயன்படுத்தி தலையிடுவதால் எமது இராணுவத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, அதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். உடனடியாக பாராளுமன்ற குழு ஒன்றினை நியமித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல,

 'யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பான் கீ மூன் இலங்கை வந்த நேரத்தில், அவர் கண்டிக்கு சென்ற வேளையில் அவருடன் மஹிந்த ராஜபக் ஷ உடன்படிக்கை ஒன்றினை செய்துகொண்டதுடன் யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பேன் என மஹிந்த ராஜபக் ஷவே வாக்குறுதியும் வழங்கினார். நாம் வாக்குறுதிகளை வழங்கவில்லை' என்றார்.

இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர,

கிரியெல்ல எம்.பி கூறுவது சரியானது. அதனால் தான் உடலாகம, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றை நியமித்து உள்ளக ரீதியில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் உள்ளக ரீதியில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கூட இன்று ஏற்றுக்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இல்லையென்றால் அதற்குமேலும் நாம் என்ன செய்வது. இதுவே எம்மிடத்தில் இருக்கும் கேள்வி என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும்...

2025-02-07 19:49:30
news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30
news-image

மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளையாட்டு கற்பித்துக்கொடுக்கும்...

2025-02-07 17:44:37
news-image

மக்கள் அச்சமடையத் தேவையில்லை : எந்தவொரு...

2025-02-07 17:36:09
news-image

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு...

2025-02-07 16:10:32
news-image

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு...

2025-02-07 16:35:27
news-image

கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

2025-02-07 15:36:35
news-image

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம்...

2025-02-07 15:37:14
news-image

தெஹியோவிட்ட பகுதியில் தீ பரவல் -...

2025-02-07 18:37:55