ஐ.நா. வை சமாளிக்க அரசாங்கம் நாடகமாடுகின்றது - நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் சார்ள்ஸ் எம்.பிக்குமிடையில் வாக்குவாதம்

09 Feb, 2022 | 08:14 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையையும்   சமாளிக்கவே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களின்  விடுதலைகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இலங்கையில் மனித உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி சபையில் விமர்சித்தார். 

இந்த கூற்றினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சார்ல்ஸ் எம்.பிக்கும் இடையில் சபையில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை 9 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய சார்ல்ஸ் எம்.பி கூறுகையில், 

தற்பொழுது முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடை சட்ட திருத்தமானது இதற்கு முன்னர் இருந்ததை போன்றே காணப்படுகின்றது. 

புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்திலும், அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் கைதுசெய்ய முடியும் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஒரு நபரை கைது செய்து, எந்தவிதமான சாட்சியும் இல்லாமல்,அவரை சித்திரவதை செய்கின்ற போது அவர் காட்டுகின்ற இடங்களில் எல்லாம் கையெழுத்து வைக்கின்றார். அந்த கையெழுத்தை வைத்ததன் அடிப்படையில், நீண்ட காலமாக விசாரணை கைதியாக சிறைச்சாலையில் உள்ளார். 

ஆகவே மாற்றீடாக கொண்டுவரப்பதட்ட பயங்கரவாத தடை சட்டமானது பிரயோசனமற்றதாகும்.

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்காது விட்டால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவோம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல் 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூட அப்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதிகளை வழங்கியிருந்தது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நீதி அமைச்சர்

அலி சப்ரி :-  இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் எந்த நன்மையும் இல்லை என்றா கூறுகின்றீர்கள்? இந்த திருத்தங்களை நீங்கள் வாசித்துப்பார்த்தீர்களா?

சார்ல்ஸ் எம்.பி :-  ஆம், நான் வாசித்தேன்,  இதற்கு முன்னர் இருந்த சட்டத்தை ஒத்ததாகவே இதுவும் காணப்படுகின்றது. ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் உண்மையே , உதாரணமாக 18 மாதம் என்பதை 12 மாதம் என கூறுவது போன்றதெல்லாம் அர்த்தமற்றது.

நீதி அமைச்சர் அலி சப்ரி :-  ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சியில் இருந்தீர்கள் தானே, பயங்கரவாத தடை சட்டத்தை ஏதேனும் ஒரு மாற்றத்தை செய்தீர்களா? நாம் மாற்றங்களை செய்துள்ளோம். பிணை வழங்கும் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

சார்ல்ஸ் எம்.பி :-  நாம் முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை, நீங்கள் கூறும் அனைத்துமே ஏமாற்றும் வேலை. சர்வதேசத்தை ஏமாற்றும் வேலையையே நீங்கள் முன்னெடுத்து வருகின்றீர்கள். 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விடுதலையை எடுத்துக்கொண்டாலும் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த விடுதலைகள் இடம்பெறுகின்றன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படும் வேளையில் இலங்கை சமர்பிக்கும் அறிக்கையில் சில காரணிகளை சேர்க்கவே இந்த விடுதலைகள், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. 

ஐரோப்பிய ஒன்றியத்தை  சமாளிக்கவும், ஐ.நாவை சமாளிக்கவுமேயாகும். மாறாக இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்ல என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right