( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்கள் சிறைப்படுத்தலின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  CA/ PHC/APN/10/22 எனும் மனுவின்  உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர்.

அந்த உத்தரவுக்கு அமைவாக  சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல அனுமதித்தார்.

அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ஹிஜாஸை விடுவிக்க,  மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நீதிபதி குமாரி அபேரத்ன கட்டளையிட்டார். 

இதனைவிட பிணை நிபந்தனைகளாக  இதுவரை ஹிஜாஸ் தனது கடவுச் சீட்டை புத்தளம் மேல் நீதிமன்றில் சமர்ப்பித்திருக்காத நிலையில் அது திறந்த மன்றில் உடனடியாக் சமர்ப்பிக்கப்பட்டது. 

அத்துடன் தனது நிரந்தர வதிவிடத்தை அவர் உரிய கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மேல் நீதிமன்றுக்கு பிணை நிபந்தனையாக முன் வைத்தார். 

உயிர்த்த ஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் வெலிக்கடை , புதிய மெகசின் சிறையில் விளக்கமறியலில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.