(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் விஜயம் கைவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியைத் தங்க வைப்பதற்கு நிருவகிக்கக்கூடிய தனிமைப்படுத்தல் இடங்கள் இல்லை என நியூஸிலாந்து அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் விஜயம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய கிரிக்கெட் விஜயங்கள், மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் என்பன திட்டமிட்டபடி நடத்தப்படும் என நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேப்பியரில் மார்ச் மாத நடுப் பகுதியில் 4 தினங்களுக்குள் நடைபெறவிருந்த அவுஸ்திரேலியாவுடான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை கைவிடுவதற்கு நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனமும் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா நிறுவனமும் இணங்கியுள்ளன.

அவுஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்துக்கு செல்லும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை நியூஸிலாந்து தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் அந்தத் தொடர் கைவிடப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாவிருந்த 4 போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு நியூஸிலாந்து நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானுக்கான அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயண காலத்திலேயே நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவிருந்தது.

எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்தை கைவிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது என நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வைட் தெரிவித்தார்.

 இதேவேளை, நெதர்லாந்துக்கு எதிராக மார்ச் மாதம் 25ஆம் திகதி டவ்ரங்கா பே ஓவல் மைதானத்தில் நடத்தப்படவிருந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியை நேப்பியர் மெக்லீன் பார்க் அரங்குக்கு மாற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.  

எவ்வாறாயினும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள ஏனைய கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என நியூஸிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நியூஸிலாந்துடனான இந்திய மகளிர் கிரிக்கெட் தொடர், ; ஆபிரிக்க ஆடவர் கிரிக்கெட் தொடர் மற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்;) ஆகியன திட்டமிட்டவாறு குறிப்பிட்ட தினங்களில் நடைபெறவுள்ளன.

8 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி வரவேற்பு நாடான நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் டவ்ரங்கா, பெ ஓவல் மைதானத்தில் மார்ச் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.